| அழகிய பெரிய குளம், நல்ல படித்துறைகள் உள்ளன. நாற்புறமும் கோபுரங்கள் உள்ளன. உயர்ந்துள்ள கொடி மரம் பணிந்து கோயிலுள் நுழையும்போது வாயிலில் இரு துவார பாலகர்கள் நம்மை வரவேற்கின்றனர். பக்கத்தில் உட்புறமாகக் கரிகாற்சோழனின் சிலையொன்றுள்ளது. உட்செல்லுகிறோம். வலப்பால் வாகன மண்டபம். இடப்பாலுள்ளது பவித்ர உற்சவ மண்டபம். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். சற்று முன்னால் சென்று இடப்புறமாகத் திரும்பினால் அம்மூலையில் உள்ள தூணில் இறைவன், இறைவியைத் திருமணங்கொள்ளும் அழகான சிற்பம் உள்ளது. அதன் எதிர்த்தூணில் இறைவி, இறைவனின் கண்களைமூடும் சிற்பம் உள்ளது. இடப்பால் திரும்பிப் பிராகார வலம் வருகிறோம். வலப்பால் ‘பிரளயகால சக்தி’யின் சந்நிதி உள்ளது. ‘ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே காத்துக் காஞ்சியை மாறிலாது இருத்திடுகின்ற’ அம்பிகை இவள். வழிபட்டுத் தொடர்கிறோம். பிரகாரம் மிக்க அழகுடையது. பக்கத்துத் தூண்களின் அமைப்பும் உச்சிப்பகுதியும் அற்புதமான அழகுடையவை. செல்லும்போதே வலப்பால் இருப்பது “சபாநாயகர்” மண்டபம். இது நாளடைவில் ‘நாயகர்’ மண்டபம் என்றாகி, இன்று மக்கள் வழக்கில் கொச்சையாக நாயர் மண்டபம் என்று வழங்குகிறது : இங்குத்தான் ஏகம்பரநாதரின் உற்சவத் திருமேனி உள்ளது. சந்நிதியுள் பெருமான் (இங்கு) சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகிறார். இம்மூர்த்தம் இராசசிம்ம பல்லவனின் உபயமாகச் செய்துவைக்கப்பட்டது. இதற்குச் சான்றாக இதன் பின்னால் பிரபாவளி செருகுமிடத்தில் சிங்கம் உள்ளது. பின்னால் உமாமகேசுவரர், சந்திரசேகரர், ஸ்ரீ கண்டசிவாசாரியார் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெருவிழாக் காலங்களில் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்படுவதும், பெருமான் உலாவுக்குப் புறப்படுகின்ற சிறப்புடையதும் இம்மண்டபத்தில்தான். இச்சந்நிதியில் இரு பக்கங்களிலும் பெரிய கண்ணாடிகள் வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் திருமேனியைப் பார்த்துத் தரிசிப்பதே தனியழகு. பிராகாரம் முழுவதிலும் இடப்பால் வரிசையாகச் சிவலிங்கங்கள் வைக்கப் பட்டுள்ளன. பஞ்சமுக விநாயகர் தரிசனம். இது பிற்காலப் பிரதிஷ்டை, (1-2-1979)ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.) அடுத்து வருவது மாவடி. தலத்திற்குரிய பெருமையுடையது. மாதவச் சிவஞான சுவாமிகள் “மருமலர்த்தனிமா” என்று இதைக் குறிப்பிடுகின்றார். மாவடியை வலம் வரும் அமைப்பில் பிராகாரமுள்ளது. துவார கணபதியையும், |