பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 25


     ஆறுமுகரையும்   வணங்கி,   மேலேறிச்  சென்று   இறைவனையும்
இறைவியையும்  தரிசிக்கலாம்.   பீடத்தின்  அடியில்  பஞ்சாக்கினி தவம்,
இலிங்கோற்பவ வரலாறு : அம்பிகை தழுவும்  கோலம் முதலிய சிற்பங்கள்
உள்ளன.


     மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய
இடமாகும். திருமணங்கள்   நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள்
அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக்கொள்ளும் நிலையை
இன்றும் காணலாம்.


     வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு
கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு மேல்
என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே
பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும்
கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர்.


     தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி
தந்தருளினார். ‘ஒருமாவின்கீழரையர்’ என்பது தனிப்பாடல். இம்மாமரத்தை
வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம்
வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது.
அடுத்து வலப்பால் படிகளேறிச் சென்றால் ‘ஏலவார் குழலி’ - அம்பாளின்
உற்சவச் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். அழகான திருமேனி.


     பக்கத்தில் ‘மாவடிவைகும் செவ்வேள்’ சந்நிதி. குமரகோட்டம் என்னும்
பெயரில் தனிக்கோயில் முருகப் பெருமானுக்கு   இத்தலத்தில்  இருந்தாலும்,
அப்பெருமானின் அருள் வரலாற்றைக் கூறும்   கந்தபுராணம்  இத்தலத்தில்
தோன்றினாலும், அதில் ‘மூவிரு முகங்கள்  போற்றி’ எனும் பாடலில் வரும்
“காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி”  என்று   புகழப்படும்
தொடருக்குரிய பெருமான் இவரேயாவார்.


     இச்சந்தியில் உற்சவத் திருமேனி  (வள்ளி தெய்வயானையுடன் கூடி)
முன்னால் இருக்க, பின்னால் இதே திருமேனிகள்  சிலாரூபத்தில் உள்ளன.
அடுத்த தரிசனம் நடராச சபை - இடப்பால் உள்ளது.


     11-12-1961ல் புதியதாக நிறுவப்பட்டது. முன் மண்டபம் அழகாக உள்ளது.
சபையில்  அம்பலக் கூத்தருடன்  சிவகாமியும்   மாணிக்கவாசகரும்   காட்சி
தருகின்றனர்.   தரிசித்து   வெளி  வந்தால்   பக்கத்தில் ‘பைரவர்’ சந்நிதி.
அடுத்துள்ளது யாக சாலை. எதிரில்