| வலப்பால் நவக்கிரக சந்நிதி. கிரகங்கள் உரிய வாகனங்கள் மீது அமர்ந்து உரிய திசைகளை நோக்கியிருக்கும் அமைப்பில் உள்ளன. நடுவில் சூரியன் உள்ளார். உள்வாயிலைத் தாண்டுகிறோம். இடப்பால் இத்தலத்து வாழ்ந்த நாயன்மார்களான திருக்குறிப்புத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன், சாக்கிய நாயனார் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அடுத்து நால்வர் சந்நிதி ; தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள் ; முடிவில் சந்தானாசாரியர்களும் உளர். எதிரில் வலப்பால் ‘வெள்ளக் கம்பர்’ சிவலிங்கத் திருமேனி உள்ளது. அடுத்துப் பிரகாரத்தில் இடப்பால் சிவலிங்க பாணங்கள் மட்டும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, ஆறுமுகப்பெருமான் திருவுருவமும், பக்கத்தில் ‘கள்ளக் கம்பர்’ சிவலிங்கத் திருமேனியும், அடுத்து ‘மத்தள மாதவேசர்’ சிவலிங்கத் திருமேனியும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார். இத்திருக்கோயிலில் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் ஏதுமில்லை. அடுத்து இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் உள்ளன. நேரே நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி. இச்சந்தியின் பக்கத்தில் ‘நல்ல கம்பர்’ சிவலிங்கத் திருமேனியும், அடுத்து, சற்று உள்ளடங்கியதாகச் சூரியன் திருவுருவமும் உள்ளன. நாடொறும் ஆலய பூஜை இச்சூரிய பகவான் வழிபாட்டிலேயே தொடங்குகின்றது. (நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் பெற்றது. இங்கு, தீர்த்தம் தரப்பெற்றுச் சடாரியும் சிவாசாரியாரால் சார்த்தப்படுகிறது. இச்சந்நிதியில் சிலாரூபமான திருமேனி வழிபாட்டில் உள்ளது. (பக்கத்தில் உள்ள சுதைரூபம் வழிபாட்டில் இல்லை.) மூலவரைத் தரிசிக்கச் செல்லுகிறோம். ஆலந்தானுகந்து அமுத செய்த பிரான் பிருதிவி(மணல்)லிங்கமாகக் காட்சி தருகிறார். பாணம் சற்று கூசாகவுள்ளது. இதன்மீது தண்ணீர்படக்கூடாது. அபிஷேகங்கள் முதலிய அனைத்தும் ஆவுடையாருக்கே. இலிங்கபாணத்திற்குப் புனுகுச் சட்டம் மட்டும் சார்த்தப்படுகிறது. பின்னால் சுவரில் சோமாஸ்கந்தர் திருமேனி உள்ளது. இலிங்க வகைகளுள் அம்பாள் அமைத்து வழிபட்டஇது ‘தேவிக லிங்கமாகும்’. திங்கட்கிழமைதோறும் தல மகிமைத் தொடர்பான - அம்மை தழுவும் கோலமுடைய - கவசம் சார்த்தப்படுகிறது. ஏலவார்குழலாள் என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காலகாலனாம் கம்பன் எம்மானைக் கண்குளிரக் கண்டு மகிழ்கிறோம். தரிசனம் முடித்து |