| பக்கவாயில் வழியாக இறங்கிச் சண்டேசுவரரை வணங்க வழியுள்ளது. ராஜகோபுரம் தெற்கு நோக்கியிருப்பினும் மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார். மூலவரைத் தரிசித்து, சண்டேசுவரரின் அருள் பெற்று வெளியே வந்து கொடி மரத்தின் முன்பு வீழ்ந்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்கிறோம். வெளியில் பெரிய நந்தி உருவம் உள்ளது. இதற்குப் பக்கத்தில் ‘வாலீசம்’ தனிக் கோயிலாகவுள்ளது. செயல் அலுவலரின் அலுவலகத்திற்குப் பக்கத்தில் குளத்தையொட்டி ‘ரிஷபேசம்’ கோயில் உள்ளது. கச்சிமயானத்தின் முன்புள்ள தூணில் ஆதிசங்கரர், தக்ஷிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. சபாநாயகர் மண்டபத்தில் சந்நிதிக்கு எதிரில் உள்ள இருதூண்களில் ஒன்றில் அன்ன வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம் மன்மதனும் ; அவ்வாறே எதிர்த் தூணில் கிளி வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம் மன்மதனும் சிற்ப வடிவில் உள்ளனர். நவக்கிரகம் வணங்கி, உள்வாயிலுக்கு அருகில் இறங்கும் படிகளில் இறங்கும்போது ஒரு தூணில் நரசிம்மம் இரணியனைப் பிளக்கும் சிற்பமும் எதிர்த்தூணில் பிட்சாடனர் சிற்பமும் இருப்பதைக் காணலாம். நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. பூஜை முறைகள் ‘காமிக’ ஆகம அடிப்படையில் அமைந்தவை. ரதசப்தமி நாளில் சூரிய ஒளி சுவாமிமீது படுதலைக் கண்டு தரிசிக்கலாம். திருப்பணிகள் 25-10-76ல் தொடங்கப் பெற்று மகா கும்பாபிஷேகம் 1-2-79ல் நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளுமே ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டன. இக்கும்பாபிஷேகத்தை நகரத்தார்கள் செய்து தந்தது குறிப்பிடத்தக்கது. இராசகோபுரமும் (1991ல்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இராசராச சோழதேவன், விசயகண்ட கோபாலதேவன், கம்பண்ண உடையார், அச்சுத உடையார், முதற்குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் 1.ஆராதனைக்கும் திருவமுதுக்கும் விடப்பட்ட நிபந்தங்கள், 2. கோயிலுக்குப் பசுக்களை வழங்கியது. 3. நந்தா விளக்கெரிய ஏற்பாடு செய்தது முதலிய செய்திகளை அறிகிறோம். |