பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 181


என்னும் செய்தி இம்மாவட்ட கெஜட்டால் தெரிய வருகின்றது. இத்துரையின்
பெயரால் இன்றும் இவ்வூரில் தென்கோட்டை வீதியில் ஒரு சத்திரம் உள்ளது
- (ஹைட் சத்திரம்).

     இக்கோயிலிலிருந்து 72 கல்வெட்டுக்கள் படியெடுத்து வெளியிடப்
பட்டுள்ளன. இவை கண்டராதித்தன், முதலாம் ராசராசன், முதலாம்
ராசேந்திரன், ராசாதிராசன், விக்கிரமசோழன் இரண்டாம் இராசராசன்,
மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பாண்டியர், பல்லவர் விஜயநகர மன்னர்
முதலானோரின் காலத்தியவை.

     இக்கல்வெட்டுக்களிலிருந்து வேதமோதவும், புராணம் படிக்கவும்
திருமுறைப் பாராயணம் செய்யவும், பணியாளர்கட்குத் தரவும், நந்தவனம்
வைக்கவும் நிலமும் பொன்னும் பொருளும் நெல்லும் கொடுத்த செய்திகள்
அறியக்கிடக்கின்றன. வாங்கிய கடனைத் திருப்பித்தராத ஒருவனுக்குத்
தண்டனையாக கோயில் விளக்கிடுமாறு பணித்த செய்தியொன்றும் ஒரு
கல்வெட்டால் தெரிய வருகிறது. பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன்
என்பவன், தான் போர்க்களத்தில் பலரைக் கொன்ற பழி நீங்குவதற்காகப்
பழமலைநாதருக்கு வைரமுடி ஒன்று செய்துதந்து அதற்கு அவனியாளப்
பிறந்தான் என்று பெயரும் சூட்டினான் என்பதும் மற்றொரு கல்வெட்டுச்
செய்தியாகும்.

     கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், ‘திருமுதுகுன்றம் உடையார்’
‘ராசேந்திரசிம்ம வளநாட்டு இருங்கொள்ளிப்பாடி பழுவூர்க் கூற்றத்து
நெற்குப்பை திருமுதுகுன்றம் உடையார்க்கு’ என்று குறிக்கப்படுகிறது.

    இதனால் பண்டை நாளில் இம்முதுகுன்றத்திற்கு நெற்குப்பை என்ற
பெயரும் வழங்கி வந்ததாகக் கருத இடமுண்டாகிறது. மாசித் திங்களில்
பெருவிழா நடைபெறுகிறது. ஆடிப்பூர திருக்கல்யாணப் பெருவிழாவும்
சிறப்பாக நடைபெறுகிறது.

     மூவர் பாடலுடன்; அருணகிரியாரின் திருப்புகழும், குமாரதேவர்
பாடியுள்ள பெரியநாயகியம்மன் பதிகமும் ; குருநமசிவாயர் பாடியுள்ள
க்ஷேத்திரக்கோவையும் ; வள்ளற் பெருமானின் குருதரிசனப் பதிகமும் ;
சொக்கலிங்க அடிகளார் என்பவர் (19-ஆம் நூற்றாண்டு) எழுதிய பெரிய
நாயகி பிள்ளைத் தமிழும் இத்தலத்திற்கு உள்ளன.

     சிவப்பிரகாச சுவாமிகள் பழமலையந்தாதி, பெரியநாயகியம்மை
விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பிக்ஷாடன
நவமணிமாலை முதலிய நூல்களைப் பாடியுள்ளார்கள்.