பக்கம் எண் :

184 திருமுறைத்தலங்கள்


கோயிலின் முன் நந்தி மட்டுமே உள்ளது. கொடிமரமில்லை. பக்கத்தில்
உள்ள மண்டபம் கிலமாகியுள்ளது. சனகாதியோர் நால்வரும் வழிபட்ட தலம்.

     வாயிலைக் கடந்து உட்புகுந்ததும் நேரே மூலவர் சந்நிதி.

     இறைவன் - சொர்ணகடேஸ்வரர், வெண்ணெயப்பர்,
                நெல்வெண்ணெய்நாதர்.
     இறைவி - பிருஹந்நாயகி, நீலமலர்க்கண்ணி.
     தலமரம் - புன்னை (தற்போதில்லை)
     தீர்த்தம் - பெண்ணையாறு (கோயிலுக்குள் தீர்த்தக் கிணறு உள்ளது.
              நீர் நன்குள்ளது.)

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     பழமையான கோயில். பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியுள்ளது.
அடுத்துள்ள வள்ளி தெய்வயானை உடனாகிய ஆறுமுக சுவாமி மயில்
வாகனராகக் காட்சி அழகுடையது. இச்சந்நிதி திருப்பணி செய்யப்
பட்டுள்ளது. அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாகப் பக்கத்தில் உள்ளது. நின்ற
திருக்கோலம். சந்நிதிக்கு வெளியே நேர் எதிரில் மூவர் முதலிகள் - சுந்தரர்
நடுவிலும் இருபுறங்களிலும் அப்பரும் ஞானசம்பந்தரும் உள்ளனர்.
ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையிலும், சுந்தரர், நடன
சுந்தரராகவும் காட்சி தருகின்றார்.

     நடராச மண்டபம் பழுதடைந்துள்ளது. உள்ளே மூர்த்தமில்லை.
பக்கத்தில் நவக்கிரக சந்நிதி, சூரியன் சந்திரன் திருமேனிகள்
வைக்கப்பட்டுள்ளன.

     மூலவரைத் தரிசிக்கச் செல்லும் வாயிலின் வெளியே திருமால் சங்கு
சக்ரதாரியாகத் திருமகளுடன் அழகாகக் காட்சி தருகிறார். துவாரபாலகரை
தொழுது உள்வாயில் கடந்து மூலவரைத் தரிசிக்கலாம். வாயிலின் வெளியே
சுவரில் தலப்பதிகம் கல்வெட்டிற் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.

     சிவராத்திரி, சனிப்பெயர்ச்சி முதலியவை விசேஷம். கார்த்திகை தீபம்,
மாசிமகம், மார்கழித் திருவாதிரை காலங்களில் சுவாமி புறப்பாடு நிகழ்கிறது.
மாதாந்திரக் கட்டளைகள் நடைபெறுகின்றன. பெருவிழா இல்லை. நாடொறும்
ஒரு வேளை பூஜை மட்டுமே. அரசின் நிதி உதவியால் ஓரளவு திருப்பணிகள்
செய்யப்பட்டுள்ளன. குருக்களின் பெருமுயற்சியால் திருப்பணிகள் நடைபெற்று
வருகின்றன.