பக்கம் எண் :

188 திருமுறைத்தலங்கள்


      கோயில் மேற்கு நோக்கிய சந்நிதி. விசாலமான வெளியிடம்
முன்புறத்தில் பதினாறுகால் மண்டபமொன்று சற்றுப் பழுதடைந்துள்ளது.
முன்னால் வலப்பால் அம்பாள் கோயில் உள்ளது. சுவாமி ராஜகோபுரம்
மிகவும் பழமையானது. மூன்று நிலைகளை யுடையது. உள்நுழைந்ததும்
கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளது. வெளிப்பிராகாரத்தில்
சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள்
வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடப்பால் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம்
உள்ளது. வலப்பால் ‘பெரியானைக் கணபதி’யின் சந்நிதி உள்ளது. ஒளவையார்
வழிபட்டு, சுந்தரருக்கு முன் கயிலையை அடைந்ததற்குத் துணையான -
ஒளவையைத் தூக்கிவிட்ட - கணபதி இவரே என்பர்.

  “கரிமீதும் பரிமீதும் சுந்தரருஞ் சேரருமே கைலை செல்லத்
   தரியாது உடன் செல்ல ஒளவையுமே பூசை புரி தரத்தை நோக்கிக்
   கரவாது துதிக்கையால் எடுத்து அவர்கள் செலுமுன்னும் கைலை
                                                  விட்ட
   பெரியானைக் கணபதி தன்கழல் வணங்கிவிருப்பமெலாம்
                                        பெற்றுவாழ்வாம்.”

     சோமாஸ்கந்தர் சந்நிதியை அடுத்து மகாவிஷ்ணு தரிசனம். எதிர்த்
தூணில் பழநியாண்டவர் உள்ளார். வாயிலின் இடப்பால் வள்ளி தெய்வ
யானை ஆறுமுகப்பெருமான் மூர்த்தம் உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி
சந்நிதி. நடராசசபை உள்ளது. மணிவாசகரும் சிவகாமியும் உடனுளர்.
திருமுறைப் பேழையுள்ளது. கபிலர் உருவச்சிலை உள்ளது.

     தலமூர்த்தியாகிய அந்தகாசூர சம்ஹார மூர்த்தி விசேஷமானது.
பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின்
உற்சவத் திருமேனிகள் உள்ளன.

     கோஷ்ட மூர்த்தமாகவுள்ள துர்க்கை மிகவும் விசேஷமாகவுள்ளது.
எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம். இத் தேவியின்
விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் இராசராசன்
தாயின் காலத்தியது - மிகவும் பழமையானது என்பர். கருவறைச் சுவரில்
கல்வெட்டுக்கள் நிரம்பவுள. அடுத்து பிரம்மா, தட்சிணாமூர்த்தி முதலிய
கோஷ்ட மூர்த்தங்கள் உள்ளன.

     வலப்பால் பைரவர், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன.
வரிசையாக சூரியலிங்கம், ஏகாம்பரேஸ்வர் முதலாக பஞ்சபூத லிங்கங்கள்,
விசுவநாதர் விசாலாட்சி உருவங்களும் அர்த்தநாரீஸ்வரர், அகத்தியர்,
சூரியன், சம்பந்தர் முதலிய உருவங்களும் உள்ளன.