பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 189


     ஜடாமுனி, ஐயனார், வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி,
வாராகி முதலிய உருவங்கள் குடைவரைகளாக அமைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சந்நிதியைத் தொடர்ந்து அறுபத்துமூவர் மூலத் திருமேனிகள்
உள்ளன.

     துவாரபாலகரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம். சிவலிங்கத்
திருமேனி. சுயம்பு, பெரிய உருவம். திருப்பணி செய்த காலத்துத் தோண்டிப்
பார்க்க, 25 அடிக்கு மேலும் போய்க் கொண்டிருக்க, அப்படியே விட்டு
விட்டுச் சுற்றிலும் ஆவுடையாரைச் சேர்த்து எழுப்பப்பட்டதாகச்
சொல்லப்படுகிறது. நாகாபரணம் சார்த்தப்பட்டு மூலவர் கம்பீரமாகக் காட்சி
தரும் சேவை நம் கண்களை விட்டகலா. அம்பாள் கோயில் தனியே
உள்ளது - கோபுரம் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் விநாயகரும்
சுப்பிரமணியரும் உள்ளனர்.

     நேரே அம்பாள் தரிசனம். நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன்
கூடிய நான்கு திருக்கரங்கள். அம்பாளுக்கு வெள்ளிக் கவசமும் தாடங்கமும்
அணிவிக்கப்பட்டுச் சேவிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். முன்னால் நந்தி
பலிபீடம் உள்ளன.

     மாசிமாதத்தில் பெருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆறாம் நாள்
விழாவில் மாலையில் அந்தகாசூரசம்ஹார ஐதிகம் நடைபெறுகின்றது.
கார்த்திகைச் சோமவார சங்காபிஷேகம் விசேஷமானது. சஷ்டியில்
லட்சார்ச்சனை நடைபெறுகின்றது. நவராத்திரி, சித்திரையில் வசந்தோற்சவம்
முதலியனவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

     நாடொறும் நான்கு கால பூஜைகள்.

     கோயிலுக்குப் பக்கத்தில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடாலயம் உள்ளது.
இதுவே ஆதி மடாலயம் எனப்படுகிறது. முதல் மூன்று சந்நிதானங்கள்
இங்குத்தான் வாழ்ந்து சமாதியடைந்துள்ளனர். நான்காவது
சந்நிதானத்திலிருந்துதான் திருப்பாதிரிப்புலியூர் மடாலயம் அமைந்தது
என்பர். இச்சமாதிகள், பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளன.


     இவ்வூரின் வடக்கு வீதியில் குகைநமசிவாயர் சமாதி உள்ளது. சுவாமி
ஞானானந்தகிரியின் தபோவனம் இத்தலத்தில்தான் உள்ளது. அமைதியான
சுகத்திற்கு ஏற்ற இடமாக இத்தபோவனம் திகழ்கிறது. மார்கழித்
திருவாதிரையில் இங்கு ஐந்து நாள்களுக்கு