பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 191


44/12. அறையணிநல்லூர்

அரகண்டநல்லூர்

     நடுநாட்டுத் தலம்.

     தற்போது மக்கள் வழக்கில் அரகண்டநல்லூர் என்று வழங்குகிறது.
திருக்கோவலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணை யாற்றின் கரையில், ஒரு
சிறிய பாறைமேல் கோயில் உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து
செல்லும்போது, பெண்ணையாற்றுப் பாலத்தின் முன்பே இடப்புறமாகப்
பிரியும் விழுப்புரம் பாதையில் 1 கி.மீ. சென்றால் ஊர் உள்ளது. ஊருள்
காவல் நிலையத்தினை அடைந்து வலமாகத் திரும்பிச் சிறிது தூரம் சென்று,
பேருந்தை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும். திருக்கோயிலூரிலிருந்து
நகரப் பேருந்து (Town Bus) உள்ளது.

     திருக்கோவலூரிலிருந்து வருபவர்கள் பாலத்தைக் கடந்து வர
வேண்டும். இங்கிருந்து பார்த்தால் மறுகரையில் உள்ள திருக்கோயிலூர்
வீரட்டேசுவரர் கோயிலும், ஆற்றினிடையில் உள்ள கபிலர்மேடும் நன்கு
தெரியும். நீலகண்ட முனிவர், கபிலர், பாண்டவர்கள் ஆகியோர் வழிபட்ட
தலம். ரமணமகரிஷியைத் திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள்
அவருக்கு உத்தரவிட்டதலம் இது என்பர். திருக்கோயிலூர் ஸ்ரீ ஞானானந்த
கிரிசுவாமிகள் அவர்கள் இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவம்செய்து
அருளைப் பெற்றார் என்றும் கூறுகின்றனர்.