பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 193


இக்கோயிலில் வெளிச்சுற்றில் தற்போது கிலமாகவுள்ள நடனமண்டபம் பற்றிய
செவிவழிச் செய்தி வருமாறு :-

     ஒரு காலத்தில் இதனை எவரேனும் கட்டி முடிக்க வேண்டும் என்னும்
நல்லெண்ணத்தால் ‘இளவெண்மதி சூடினான்’ என்பவன், அதற்காகத்தன்
உயிரைத் தியாகம் செய்வதாக அறிவிக்க, பிற்காலத்தில் இந் நடன மண்டபம்
கட்டிமுடிக்கப்பட, அவனும் தன் உயிரைத் தியாகம் செய்தான் என்று
சொல்லப்படுகிறது. அவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட இந்நடனமண்டபம்
தற்போது சீர்கெட்டுப் பயன்படுத்த முடியாதபடி கிலமாகவுள்ளது.

     கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது ‘வீமன்
குளம்’. இது வீமன், கதையால் உண்டாக்கப்பட்டதாகக் கூறுவர்.
ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள்
உள்ளன. உள்ளே ஏதுமில்லை.

     இவ்வூரிலிருந்து விழுப்புரம் சாலையில் 1 கி.மீ. தொலைவில் ‘கழுவன்
குளம்’
என்னும் ஊர் உள்ளது. (அங்கு ஊரின் புறத்தே ஒரு குளம் உள்ளது.)
இது பற்றிச் சொல்லப்படும் செவிவழிச் செய்தி வருமாறு :-

     ஒரு காலத்தில் இத்திருக்கோயிலின் மூலவாயிலைச் சமணர்கள்
அடைந்து விட்டதாகவும் ; சம்பந்தர் இங்கு வந்தபோது பாடித்திறந்து
வாயிலை அடைத்த சமணர்களைக் கழுவேற்றியதாகவும் அவ்விடமே
தற்போது கழுவன்குளம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது என்கின்றனர்.
கோயிலுக்குச் செல்லும் வழியில் பிடாரி அம்மன் கோயில் உள்ளது.
ஊர்மக்கள் இதைச் சக்திவாய்ந்ததாகப் போற்றுகின்றனர்.

     குளக்கரையில் திரௌபதியம்மன் கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில்
உள்ள நடராச விக்ரஹம் மிகவும் அழகான அமைப்புடையது. இதுவும் ஏனைய
உற்சவ மூர்த்தங்களும் கீழையூர்க் கோயிலில் (திருக்கோவலூர் வீரட்டம்)
பாதுகாப்புக்காக வைக்கப் பட்டுள்ளதாம். நித்தியப்படி பூஜை இருவேளைகள்
மட்டுமே நடைபெறுகிறது. பௌர்ணமிதோறும் வழிபாடு நடைபெறுகிறது.

     “பீடினாற் பெரியோர்களும் பேதைமை கெடத் தீதிலா
      வீடினாலுயர்ந்தார்களும் வீடிலாரிள வெண்மதி
      சூடினார் மறைபாடினார் சுடலை நீறணிந்தாரழல்
      ஆடினார் அறையணி நல்லூர் அங்கையால் தொழுவார்களே”
                                                (சம்பந்தர்)
தலம்-13