விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்பாள் சந்நிதி உள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திருப்பணித் திட்டத்தில் இக்கோயிலின் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஆற்றுத் திருவிழா சிறப்பாகச் சொல்லப்படுகிறது. நாடொறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலிலிருந்து சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இவ்விறைவன் ‘மருதந்துறை உடைய நாயனார்’ என்று குறிக்கப்படுகின்றார். இக்கோயில் கி.பி. 1471-ல் ஒரிசா மன்னன் ஒருவனால் அழிக்கப்பட்டு, பின்பு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்மனின் பிரதிநிதியால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டின்மூலம் தெரிகிறது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை ‘கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. “ஊறிவாயன நாடிய வன்றொண்டனூரன் தேறுவார் சிந்தை தேறுமிடஞ் செங்கண் வெள்ளே றேறு வாரெய்த மானிடையா றிடைமருதைக் கூறுவார் வினையெவ்விட மெய்குளிர்வாரே.” (சுந்தரர்) -“தாவாக் கடையாற்றின் அன்பர்தமைக் கல்லாற்றினீக்கும் இடையாற்றின் வாழ் நல்இயல்பே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மருதீஸ்வரர் தேவஸ்தானம் எடையார் & அஞ்சல் திருக்கோயிலூர் வட்டம் (வழி) பெரிய செவலை - 607 209. விழுப்புரம் மாவட்டம். |