பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 197


என்றும், ‘தரும தேவதை’ என்றும் புகழப்பெற்ற சடையப்ப வள்ளலின் பதி.
சைவ சித்தாந்த சாத்திரங்களுள் தலையானதாகத் திகழும் சிவஞானபோதம்
நூலை அருளிச் செய்த மெய்கண்டார் (மெய்கண்டதேவர்) வாழ்ந்து உபதேசம்
பெற்ற சிறப்புத் தலமும் இதுவே. முதிய வேதியராய் வந்து இறைவன்
சுந்தரரைத் தடுத்தாண்ட இடம் - தடுத்தாவூர் என்று வழங்குகிறது. இவ்விடம்
திருநாவலூரிலிருந்து, திருவெண்ணெய் நல்லூருக்குப் போகும் வழியில் சிறிய
கிராமமாகவுள்ளது.

     ஊரின் பெயர் ‘திருவெண்ணெய் நல்லூர்’. கோயிலின் பெயர்
‘திருவருட்டுறை’ என்பதாம். ‘வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் அத்தா’
என்னும் சுந்தரர் வாக்கால் இதையறியலாம். சுந்தரரின் முதல் தேவாரம்
பிறந்த தலமிஃது. கிராம மக்கள் ; இவ்வூரில் அம்பாள் வெண்ணெய்யால்
கோட்டை கட்டி வீற்றிருப்பதாகக் கூறுகின்றனர்.

     இறைவன் - கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர், அருட்டுறைநாதர்,
               தடுத்தாட்கொண்ட நாதர்.
     இறைவி - மங்களாம்பிகை, வேற்கண்ணியம்மை.
     தலமரம் - மூங்கில் (இப்போது இல்லை.)
     தீர்த்தம் - தண்டதீர்த்தம் (பக்கத்தில் உள்ள குளம்.)
     தலவிநாயகர் - பொல்லாப் பிள்ளையார்.

     சுந்தரர் பாடல் பெற்ற தலம்.

     அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது.

     ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கோபுரம் கடந்து
உள்நுழைந்ததும் சுந்தரர் வழக்கு நடந்த, ‘வழக்கு தீர்த்த மண்டபம்’ வழக்கு
வென்ற அம்பலம் உள்ளது. இம்மண்டபம் கிலமாகியுள்ளது. அடுத்து, செப்புக்
கவசமிட்ட கொடிமரம், முன்னர் கொடிமர விநாயகர், பலிபீடம் உள்ளன.
நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி
தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி
உள்ளதையும் காணலாம். (இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன்
காட்சியளிக்கிறார்.

     கல்மண்டபத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் வரிசையாக
வுள்ளன. நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கவாயில் வழியாக உட்சென்றால்
மூலவர் சந்நிதி. எதிரில் சாளரம் உள்ளது. மூலவர் அழகான சிவலிங்கத்
திருமேனி.