வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. விசாலமான உட்பரப்பு. விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள், கஜலட்சுமி சந்நிதி, மறுகோடியில் நவக்கிரக சந்நிதியும் உள்ளன. நவக்கிரகங்கள் உரிய அமைப்பிலும் உரிய வாகனங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளன. ‘பித்தா பிறை சூடீ’ பதிகம் ஸ்ரீ காசி மடத்தின் திருப்பணியாகக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. அம்பாள் கோயில் இடப்பால் உள்ளது. நின்ற திருக்கோலம். பள்ளியறை உள்ளது. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. இத்தலத்திற்கு அண்மையில்தான் மணம் தவிர்ந்த புத்தூர் (மணம்தவிந்த புத்தூர் - மணப்பந்தூர்) உள்ளது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தின் மூலம் இக்கோயிலின் சுவாமி, அம்பாள் விமானங்களும் ; மக்களின் பேராதரவால் ஏனைய திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் உள்ள தலங்கள் திருமுண்டீச்சுரமும், திருநாவலூரும் ஆகும். பங்குனி உத்திரம், ஆடி சுவாதி முதலிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி சுவாமி உற்சவத்தில் திருமண உற்சவம், திருமணத்தைத் தடுத்தது, சுந்தரருக்குக் காட்சி கொடுத்தது முதலிய ஐதீகங்கள் நடைபெறுகின்றன. சுந்தரர் உற்சவத் திருமேனி கண்டு தொழத் தக்கது. மெய்கண்டாரின் சமாதி, வடக்கு வீதியின் கோடியில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த இம்மடாலயத்தில் (மெய்கண்ட தேசிகர் மடத்தில்) மேற்படி ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் ஒருவர் இருக்கின்றார். இம்மடத்தின்மூலம் கோயிலில் நாடொறும் காலசந்திக் கட்டளை நடைபெறகிறது. கோயிற் பெருவிழாவில் எட்டாந் திருவிழாவன்று திருவாவடுதுறை ஆதீன மடத்தின்மூலம் மண்டகப்படி நடைபெறுகிறது. இதுதவிர, ஐப்பசி சுவாதியில் மெய்கண்டார் குருபூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நூற்றுக்கணக்கானோருக்கு ஆதீனத்தின்மூலம் அன்னதானம் செய்யப்படுகிறது. |