பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 205


     சம்ஹார பைரவரே வடுகபைரவர் என்றழைக்கப்படுவராவார்.
இக்கோயில் சோழர்காலக் கலைப் பாணியில் அமைந்துள்ளது. சுவாமி
விமானம் தஞ்சைக் கோயிலமைப்பிலுள்ளது. கோயில் தொல் பொருள்
ஆய்வுத் துறையினரால் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அழகிய சுற்றுமதில்கள். கிழக்கு நோக்கிய கோயில்.

    முகப்பு வாயிலைக் கடந்ததும் இடப்பால் நால்வர் சந்நிதியுள்ளது.
பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். தலமரம் வன்னி உள்ளது. ஆறுமுகர்
திருவுருவம் மிகவும் அழகானது. உள்நுழைந்ததும் வலப்பால் அம்பாள் சந்நிதி
உள்ளது - நின்ற திருக்கோலம். நேரே மூலவர் சந்நிதி. துவார பாலகர்களைத்
தொழுது உட்சென்று சிவலிங்கத் திருமேனியைத் தரிசிக்கலாம். நாடொறும்
இருகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கார்த்திகை அஷ்டமியில்
பைரவருக்கு இங்கு விசேஷமான பூசைகள் நடைபெறுகின்றன ; இதுதவிர,
ஞாயிறு தோறும் அன்பர்களின் உபயமாகப் பைரவருக்கு அபிஷேகம்
நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவமாக நடைபெறுகிறது.

    “பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி
     ஏலுஞ்சுடு நீறும் என்பும் ஒளிமல்கக்
     கோலம் பொழிற் சோலைக் கூடி மட அன்னம்
     ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே.”           (சம்பந்தர்)

                                       -“நேசமுற
           வேற்றா வடுகூர் இதயத்தினார்க் கென்றுந்
           தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே”        (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. வடுகீஸ்வரர் திருக்கோயில்
     திருவாண்டார் கோயில் & அஞ்சல்
     (வழி) கண்டமங்கலம் - 605 102.
     (புதுவை மாநிலம்)