செய்யப்பட்டு, விபவ ஆண்டு ஆவணி, 29ஆம் நாள் (14-9-1988) அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14-9-1989ல் ஸ்ரீ மடத்தின் உதவியோடு ராசகோபுரத் திருப்பணியும் தொடங்கப்பட்டுப் பூர்த்தியாகியுள்ளது. இராசகோபுரம் கடந்து உள்சென்றதும் கவசமிட்ட கொடிமரம் - நந்தி உள்ளன. வலமாக வரும்போது விநாயகர், சுப்பிரமணியர், சந்நிதிகள் தனிக்கோயில்களாக உள்ளன. வலமாக வந்து, பக்கவாயில் வழியாக நுழைந்து, முன்மண்டபம் தாண்டி உள்ளே சென்று வலம் வரும்போது, விநாயகர், அறுபத்துமூவர் சந்நிதிகள், சப்த மாதர்கள், யுகலிங்கங்கள், கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. இங்குள்ள நடராசர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால் அதைப்பார்க்கும்போது அவ்வடிவமாகத் தெரியவில்லை. குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது. மூலவர் தரிசனத்திற்குச் செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைபோடப் பட்டுள்ளது. சுவாமி, எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின் இத்திரை எப்போதும் இடப்பட்டுள்ளது. திரையில் மேற்புறத்தில் ஏகாதச ருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கிய சந்நிதி. தீபாராதனையின்போது - திரை விலகும்போது சிவலிங்கத் திருமேனியைத் தரிசிக்கலாம். குட்டையான சிறிய இலிங்கத் திருமேனி - சிறிய ஆவுடையார். ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம் நடைபெறுகின்றது. இக்கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தங்களில் ‘உதவி’ என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதி வலப்பால் தனிக்கோயிலாகவுள்ளது. உயரமான திருமேனி - நின்ற திருக்கோலம். கார்த்திகையில் கோயிற் பெருவிழா |