பக்கம் எண் :

212 திருமுறைத்தலங்கள்


     கரையேறிய அப்பர் ‘ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பதிகம் பாடி
திருப்பாதிரிப்புலியூர் அரணைப் பணிந்தார். அப் பதிகத்தில்
‘தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியோர்களுக்கே’ என்று
குறிப்பிடுவதால் இப்பெருமான் ‘தோன்றாத்துணை நாதர்’ என்னும் பெயரும்
பெற்றார். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளது. திருக்கோயில் உள்ள வீதி -
பாடலேஸ்வரர் சந்நிதி வீதி என்றழைக்கப்படுகிறது.

     கிழக்கு நோக்கிய கோயில். முன் மண்டபமுள்ளது. பக்கத்தில் உள்ள
சிவகரதீர்த்தம் - நல்ல படித்துறைகளுடன் உள்ளது ; ராஜகோபுரம் ஐந்து
நிலைகளையுடையது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன.
வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட
கொடிமரம், முன்னால் நந்தி முதலியவைகளைத் தரிசிக்கலாம். இடப்புறம்
திரும்பின் திருக்கோயில் அலுவலகம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி
ஏதுமில்லை - இரண்டு பாதிரி மரங்கள் - தலமரங்கள் உள்ளன.
மரத்தடியில் விநாயகர், நாகப்பிரதிஷ்டை முதலியவை காணலாம். பாதிரி -
பூக்கும், ஆனால் காய்க்காது. சித்திரை மாதம் முழுவதும் பாதிரிப்பூ
பூத்திருக்குமாம். வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர்
தொழுது வாயிலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள்சுற்றில்
சந்திரனையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும் அடுத்து மூலமூர்த்தமும்
தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி
உழவாரத்துடன் காட்சி தருகின்றார். பக்கத்தில் பள்ளியறை. (இக்கோயிலில்
பள்ளியறை, சுவாமி கோயில் உள்ளது. நாடொறும் அம்பிகையே
பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்கு நடைபெறும் தனிச்சிறப்பாகும்.)

     அறுபத்துமூவர் மூலமூர்த்தங்களும் கடந்த பின்னர் தல விநாயகராகிய
‘சொன்னவாறறி விநாயகரை’த் தரிசிக்கலாம் - வலம்புரிமூர்த்தி. இவருக்குக்
கன்னி விநாயகர் என்று பெயர். அம்பிகை இறைவனை வழிபட்டபோது
உதவிசெய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார்.

     உற்சவத் திருமேனிகளின் சந்நிதி - வியாக்ரபாதர், அகத்தியர்
முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர், வள்ளி தெய்வயானை
சமேத ஆறுமுகர் சந்நிதிகள் - எதிரில் வலப்பால் தலமரமான ஆதிபாதிரி
மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து,
துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம்
செய்த இடம் - அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது.
உருவமில்லை - பீடம் மட்டுமே