51/19. திருமுண்டீச்சரம். கிராமம் | நடுநாட்டுத் தலம். பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள தலம். மக்கள் இவ்வூரைக் ‘கிராமம்’ என்று அழைக்கின்றனர். (1) திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சென்று, திருவெண்ணெய்நல்லூரைத் தாண்டி 2 கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். (2) விழுப்புரத்திலிருந்து நகரப் பேருந்தும் செல்கிறது. சாலை யோரத்தில் கோயில் உள்ளது. கோயிலருகே இறங்கலாம். இறைவனின் காவலர்களாகிய ‘திண்டி’ ‘முண்டி’ வழிபட்ட தலம். பிரமன், இந்திரன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். துவாபர யுகத்தில் சொக்கலிங்க மன்னன் என்பவன் வேட்டைக்கு வந்த போது குளத்தில் ஒரு அதிசயமான தாமரை மலரைக் கண்டான். ஆள் அனுப்பி, பறித்து வருமாறு கட்டளையிட்டான். அவனும் சென்று பறிக்கையில் அம்மலர் அவன் கைக்கு அகப்படாமல் சுற்றி வரலாயிற்று. அதுகண்ட மன்னன், அதன்மீது அம்பெய்த ; குளம் முழுவதும் செந்நிறமாயிற்று. கண்ட மன்னன் மயங்கி அதனருகே சென்று பார்த்தபோது அம்மலரில் இலிங்கமிருப்பதைக் கண்டான் ; அதை எடுத்து அக்குளக்கரையில் ஆலயம் எடுப்பித்துப் பிரதிஷ்டை செய்தான் என்று வரலாறு சொல்லப்படுகிறது. மன்னன் அம்பு எய்திய காரணத்தால் இன்றும் சுவாமிமீது அம்புபட்ட தழும்புள்ளது. இதனால் சுவாமிக்கு ‘முடீஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது. இப்பெயரே கல்வெட்டில் “மௌலி கிராமம்” என்று குறிக்கப்பெறுகின்றது. நாளடைவில் மக்கள் ‘மௌலி’ என்பதை விட்டுவிட்டு ‘கிராமம்’ என்றே அழைக்கலாயினர். அவ்வழக்கே தொடர்ந்து வந்து, இன்றும் இவ்வூர் ‘கிராமம்’ என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. ‘முடீச்சுரம்’ என்ற பெயர் ‘முண்டீச்சுரம்’ என்றாயிற்று என்பதும் எண்ணத்தக்கது. இக்கோயில் கி.பி.943-ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை, (பொக்கணம்) தந்தார் ஆதலின் இவ்விறைவன் கல்வெட்டில் |