‘பொக்கணம் கொடுத்த நாயனார்’ என்றும் ; மற்றும் ஆற்றுத்தளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்பெறுகின்றார். (ஆற்றின் கரையிலுள்ள கோயில் - ஆற்றுத்தளி.) இறைவன் - சிவலோகநாதர், முடீஸ்வரர், முண்டீசர். இறைவி - சௌந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வநாயகி, செல்வாம்பிகை. தீர்த்தம் - முண்டக தீர்த்தம் (அ) பிரம தீர்த்தம். தலமரம் - வன்னி (இப்போது இல்லை) அப்பர் பாடியது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் கிழக்கு நோக்கியது. நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கொடிமரமில்லை. துவார வாயிலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். (முருகனின் இடக்கீழ்க்கை நாராச முத்திரையுடன் - அகமர்ஷணநீரைக் கீழேவிடும் அமைப்பில் - இருப்பது கவனிக்கத் தக்கது.) மண்டபத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. பக்கவாயில் வழியாக உள்நுழைந்தால் வலப்பால் நால்வர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்து சென்று மூலவரைத் தரிசிக்கலாம். திருநீற்றுப் பட்டையும், அக்கமணி மாலையும் தாங்கி, தெய்விகப் பொலிவுடன் சிவலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. நடராச சபை உள்ளது. உட்சுற்று முழுவதும் தளவரிசையுள்ளது. விசாலமான இடப்பரப்பு, வரசித்தி விநாயகர், சண்முகர் சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. தட்சிணாமூர்த்தி கல்லாலமரமின்றி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு காட்சி தருகிறார். சுவாமிக்கு வலப்பால் அம்பாள் சந்நிதி. தனிக்கோயிலாகவுள்ளது. நின்ற திருக்கோலம். முன்மண்டபத்தில் இடப்பால் நவக்கிரக சந்நிதி உள்ளது. சப்தமாதாக்கள் : ஐயனார், துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. சுவாமி, அம்பாள் விமானங்கள் மிகப்பழமையானவை. இக்கோயில் தேவகோட்டை ராம.அரு.அரு.ராம. அருணாசலம் செட்டியார் அவர்களின் பொருளுதவியால் 30-08-1950-ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. நாடொறும் இருவேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. பெருவிழாக்கள் ஏதும் நடைபெறவில்லை. |