பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 217


    பழமையான கல்வெட்டுக்களில் திருமுடீச்சரம் என்றே பெயருள்ளது.
முடியூர் நாடு என்னும் தனிப் பெயர் கொண்ட நாட்டுக்குத் தலைநகராக
இருந்தது. மதுரை கோப்பரகேசரி வர்மனின் 24 ஆவது கல்வெட்டில் முடியூர்
நாட்டு முடியூர் என்றுள்ளது. சௌந்தர பாண்டியன் காலக் கல்வெட்டில்
முடியூர் நாட்டுக் கிராமம் என்றுள்ளது. எனவே முடியூர் என்பது முடீச்சரம்
என்றாகி, அது மருவி முண்டீச்சரம் ஆகியுள்ளது என்பார் திரு.வை. சுந்தரேச
வாண்டையார்.

  “கானவன்காண் கானவனாய்ப் பொருதான்றான்காண்
      கனலாட வல்லான்காண் கையிலேந்தும்
   மானவன்காண் மறைநான்கும் ஆயினான்காண்
      வல்லேறு ஒன்றது ஏறவல்லான்றான்காண்
   ஊனவன்காண் உலகத்துக்கு உயிரானான்காண்
      உரையவன்காண் உணர்வு அவன்காண் உணர்ந்தார்க்கு என்றும்
   தேனவன்காண் திருமுண்டீச் சரத்துமேய
      சிவலோகன்காண் அவன்என் சிந்தையானே.”
                                             (அப்பர்)

                                      -“சீர்ப்பொலியப்
   பண்டீச் சுரனிப் பதியே விழைந்த தெனும்
   முண்டீச் சுரத்தின் முழுமுதலே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. சிவலோகநாதர் திருக்கோயில்
      கிராமம் - அஞ்சல் - 607 203.
      (வழி) உளுந்தூர்ப்பேட்டை
      உளுந்தூர்ப்பேட்டை வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.