உட்சென்றால் உட்பிராகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலா ரூபங்கள், வரிசையாகவுள்ளன. இவற்றுள் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும் - அற்புதமானதுங்கூட. தொடர்ந்து சப்தமாதாக்களும், பைரவரும், தேவியருடன் கூடி மகாவிஷ்ணுவும், நால்வரும் காட்சியளிக்கின்றனர். சந்நிதிவாயிலைக் கடந்தால் வலப்பால் நடராசசபை. உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நேரே மூலவர். அழகான அமைப்பான சிவலிங்கத் திருமேனி. கோயில் நல்ல சுற்றுமதிலுடன் நன்கு விளங்குகின்றது. முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் இறைவன் ‘திருப்பனங்காடுடைய மகாதேவர்’ என்று குறிக்கப்படுகின்றார். “விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்விரி பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா பிறைசேர் நுதலிடைக் கண்ணமர்ந்தவனே கலந்தார்க் கருளாயே.” (சம்பந்தர்) - “பெண்தகையார் ஏர்ப் பனங்காட்டூர் என்று இருநிலத்தோர் வாழ்த்துகின்ற சீர்ப் பனங்காட்டூர் மகிழ்நிக்ஷேபமே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் & அஞ்சல் - 605 603. (வழி) முண்டியம்பாக்கம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம். |