நடுநாட்டுத் தலம். 1) திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் சென்று, (விழுப்புரம்) ஊருள் செல்லாமல் (திருவண்ணாமலை) ரயில்வே கேட்டில் பிரிந்து ரயில்வே லைன் ஓரமாகச் செல்லும் விழுப்புரம், திருவண்ணாமலை, செஞ்சி பேருந்துச் சாலையில், 2. கி.மீ. சென்றால் ‘திருவாமாத்தூர்’ கைகாட்டி உள்ளது. அப்பாதையில் - இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் - 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். நல்ல பாதை இருபுறமும் வயல்கள், கோயில்வரை கார், பேருந்து செல்லும். 2) விழுப்புரம் - சூரப்பட்டு, நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. நந்தி, காமதேனு தவமிருந்து கொம்புகளைப் பெற்ற சிறப்புடைய தலம். இதனால் இதற்கு ‘கோமாத்ருபுரம்’ என்று பெயர். பெண்ணையாற்றிலிருந்து பிரியும் பம்பையாற்றின் கரையில் கோயில் உள்ளது. உயிர்களுக்கு - பசுக்களுக்கு இறைவன் தாயாக இருந்து அருளும் தலம். இராமர் வழிபட்ட சிறப்புடைய தலம். ‘புலவர் புராணம்’ பாடிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி இத்தலத்தே உள்ளது. இரட்டைப் புலவர்கள் இவ்வூருக்குக் (திருவாமாத்தூர்க் கலம்பகம்) கலம்பகம் பாடியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் பெற்ற பதி. |