இறைவன் - அபிராமேஸ்வரர், அழகியநாதர். இறைவி - முக்தாம்பிகை, அழகிய நாயகி. தலமரம் - வன்னி. தீர்த்தம் - ஆம்பலப்பொய்கை. தலவிநாயகர்- மால் துயர் தீர்த்த விநாயகர். மூவர் பாடல் பெற்ற தலம். சுவாமி கோயிலும் அம்பாள் கோயிலும் எதிரெதிரே உள்ளன. கோயிலுக்கு வெளியில் பக்கத்தில் ஆற்றங்கரையில் உள்ள மண்டபத்திலிருக்கும் விநாயகரே தல விநாயகர் (மால் துயர் தீர்த்த விநாயகர்) ஆவார். சுவாமி கோயிலின் எதிரில் உள்ள மண்டபத்தில் தலமரம் உள்ளது. மிகமிகப் பழமை வாய்ந்த இம்மரத்தின் அடிப்பாகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. சுவாமி கோயிலுக்கு ராஜகோபுரமில்லை. திறந்த முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. நெடுங்காலமாகவே கோபுரமில்லையாம். கிழக்கு நோக்கிய சந்நிதி. உட்புறம் விசாலமாகவுள்ளது. சுதையாலான நந்தி பெரிதாக உள்ளது. இதன் முன்னால் நான்கு கால் மண்டபத்தில் பள்ளத்தில் நந்தி உருவம் உள்ளது. பஞ்ச காலத்தில் மழை வேண்டி, நீர் கட்டும் வழக்கத்திற்கு இது பயன்படுகிறது. முன்னால் செப்புக் கவசமிட்ட கொடிமரமும் அதன் முன்பு கீழே அஸ்திர தேவதையின் சிலாரூபமும் உள்ளன. முன்னால் பலிபீடம். வெளிப் பிராகாரத்தில் சித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. இடப்பால் இராமர் ஆஞ்சநேயர், சீதை, இலட்சுமணன் ஆகியோர் கொண்ட சந்நிதி உள்ளது. நேர்வலப்பால் பழைய விநாயகர் சந்நிதி உளது. தனிக் கோயிலாகவுள்ள சண்முகர் சந்நிதி தரிசிக்கத்தக்கது. மேலக்கோபுரவாயில் - கோபுரம் சிதலமாகியுள்ளது. அடுத்துள்ள சிவலிங்க சந்நிதி முன்பு ஜேஷ்டாதேவி உருவம் கல்லில் செதுக்கியது அழிந்த நிலையில் உள்ளது. அலங்கார (நூற்றுக்கால்) மண்டபம் பழமையானது. யாகசாலையடுத்து ஈசான தேவர் சந்நிதி. வலம் முடித்து, சித்தி விநாயகர் சந்நிதியையடுத்துள்ள படிகள் வழியேறி உட்செல்லுகிறோம். நேரே தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது - தனிக்கோயில். இடப்பால் திரும்பி, துவாரபாலகரையும், விநாயகரையும், பிரதோஷநாயகரையும், முருகனையும் வணங்கி உட்சென்று, வலம் வரும்போது நால்வர், உற்சவத் திருமேனிகள் உள்ளன. கருவறை, அகழி அமைப்புடையது. |