பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 223


தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக் கொண்டான். அத்தடியுடன்
அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில்
இருகைகளாலும் ‘தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம்
அவனிடமே உள்ளது’ என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத
அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பிவிட்டனர்.
திரும்பப் பெற்றுக் கொண்ட தடியுடன் சென்ற அண்ணன், இங்கிருந்து 9
கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது வாய்
மதங்கொண்டு, தம்பியைத் திட்டியதோடு ; தன்னைத் தெய்வ சக்தி -
அம்பாள் சக்தி ஏதும் செய்து விடவில்லை என்று அம்பாளையும் சேர்த்துத்
திட்டினானாம். அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச்
சாகடித்தது” என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு கடித்துச் சாகடித்த
இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது.

     இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை
அம்பாளின் மார்பில் பாம்பின் வால் - சிற்பம் - உள்ளது. தரிசிப்போர்
நேரிற் காணலாம். அம்பாளுக்குச் செய்து அலங்காரம் செய்யப்படும்
வெள்ளிக் கவசத்திலும் ‘சர்ப்பத்தின் வால்’ செதுக்கப்பட்டுள்ளது.
தரிசிக்கலாம்.

     அம்பாள் நல்ல அழகான தோற்றம். அபயகரம் ஒன்றும், தொடைமீது
வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங்
கொண்டு நான்குகரங்களுடன் கூடிக் காட்சி தருகிறாள்.

     ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
சுவாமிகள் அவர்களின் பொன்விழாப் பணித்திட்டத்தில் இக்கோயிலின்
சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் விமானங்கள் தற்போது திருப்பணிகள்
செய்யப்பட்டு 10-9-1987-ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. (பிரதோஷ
வழிபாட்டு மன்றம் சிறப்பாக நடைபெறுகிறது.)

     நாடொறும் நான்கு கால பூஜைகள். பங்குனியில் பெருவிழா
நடைபெறுகிறது. தலபுராணம் உள்ளது. இத் தலத்துள்ள கல்வெட்டு ஒன்றின்
மூலம் ; இக்கோயிலில் கால சந்திகள்தோறும் தேவாரத் திருப்பதிகம்
ஓதுதற்குக் குருடர்களை நியமித்து அவர்களை ஆதரித்த அரியசெய்தி
தெரியவருகின்றது. வண்ணச்சரபம் அருள்மிகு. தண்டபாணி சுவாமிகளின்
சமாதி இத் தலத்தில் கோயிலுக்குச் சற்றுத்தள்ளி, அமைதியானதொரு
இடத்தில் உள்ளது.