பக்கம் எண் :

224 திருமுறைத்தலங்கள்


     ‘கௌமார நிச்சயம்’ செய்த பெருமான் இவராதலின் இவ்விடத்தில்
சமாதிக் கோயிலில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. சுவாமிகளின்
சிலாரூபம் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தொடு, தலை
மாலையுடனும் கோவணத்தொடும் காட்சி தருகின்றது. உற்சவத் திருமேனியும்
உள்ளது. பக்கத்தில் உள்ள தோட்டத்தில் சமாதி உள்ளது. 5-7-1898-ல்
சுவாமிகள் ஞானசமாதி கொண்டார். இவருடைய மரபினரால் இச்சமாதிக்
கோயிலும், இங்குள்ள நூலகமும் இவ்விடமாகிய கௌமார மடாலயமும்
பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சாதுக்கள் சிலர் உள்ளனர். திருக்கோயிலைக்
காணச் செல்வோர் இவ்விடத்தையும் கட்டாயம் தரிசித்து வர வேண்டும்.

     “மாறாத வெங்கூற்றை மாற்றி, மலைமகளை
     வேறாக நில்லாத வேடமே காட்டினான்
     ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
     கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே”          (சம்பந்தர்)

     ‘வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
        வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
     கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
        கடியதோர் விடையேறிக் காபாலியார்
     சுண்ணங்கள் தாங் கொண்டு துதையப் பூசித்
        தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
     அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
        அழகியரே ஆமாத்தூர் அரையனாரே.”     (அப்பர்)

  “பொன்னவன் பொன்னவன் பொன்னைத் தந்தென்னைப் போகவிடா
  மின்னவன் மின்னவன் வேதத்தினுட் பொருளாகிய
  அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
  என்னவன் என்னவன் என்மனத்து இன்புற்றிருப்பேனே.”  (சுந்தரர்)

தண்டபாணி சுவாமிகள் துதி

    “அகம்புற என்றுள சமயம் ஆறிரண்டும்
       தனதுருவத்(து) அங்கமாக் கொண்(டு)
    உகந்து கொலை புலையிஞ்சை யிலார் சொலுந்தே
       வெல்லாமும் ஒப்பித் தொண்டர்க்(கு)
    இகம்பர முற்றுள போகங் கடந்த முதற்
       கதி வழி காட்டிடச் சேயாகித்
    திகழ்ந்த தண்டபாணி திருப்புகழ் முருக
       தாசன் இரு திருத்தாள் போற்றி.”