நடுநாட்டுத் தலம். மிகவும் பிரசித்தி பெற்ற தலம். கார்த்திகை தீபப் பெருவிழா இத்தலத்தில் நடைபெறுவது நாடு முழுவதும் அறிந்தவொன்றாகும். சென்னை, வேலூர், கடலூர், சிதம்பரம், சேலம், திருச்சி, விழுப்புரம் முதலிய பலவிடங்களிலிருந்தும் பேருந்துகள் நிரம்பவுள்ளன. அண்ணாமலையார் உண்ணாமுலையாளுடன் எழுந்தருளி அன்பர்கட்கு அருள்புரிகின்ற அற்புதப் பதி. உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலம். நினைக்க முத்தியருளும் நெடும் பதி. “உன்னினர் தங்கெட்கெல்லாம் ஒல்லையின் முத்தி நல்கி” என்பது கந்தபுராணத் தொடர். அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி. ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். ரமணர் ஆசிரமம் உள்ளது. இத்திருக்கோயிலின் கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம், வடக்குக்கோபுரம் - அம் மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது. யாத்ரிகர்களுக்குரிய சத்திரங்கள், திருக்கோயில் விடுதிகள் முதலியவை உள்ளன. இங்கு மலையே இறைவனின் சொரூபம். எனவே மலைவலம் இங்குச் சிறப்புடையது. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே. இறைவன் - அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார். இறைவி - அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை. தலமரம் - மகிழம். தீர்த்தம் - பிரமதீர்த்தம். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. கோயிலுக்கு முன்னால் நீண்ட மண்டபம் உள்ளது. ராஜகோபுரம் (கீழ்க்கோபுரம்) பதினோரு நிலைகளையுடையது. கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாகவுள்ளன. உட்சென்றால் நேரே கம்பத்திளையனார் சந்நிதியும் ஞானப்பால் மண்டபமும் உள்ளன. ‘அதலசேடனாராட’ என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி. |