பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 227


     சிவகங்கைத் தீர்த்தம் - கரையில் சர்வசித்தி விநாயகர் தரிசனம்.
படிகளேறிக் கல்யாண சுந்தரரைத் தொழுது மீண்டும் வந்து பெரிய
நந்திதேவரை வணங்கிப் படிகளேறிச் செல்கிறோம். வல்லாள மகாராசன்
கோபுரம் - கோபுரத்திளையனார் சந்நிதி. வள்ளி தெய்வயானையுடன்
சுப்பிரமணியர் தரிசனம். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்
பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது. சந்நிதியில் பாம்பன்
சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது. பக்கத்தில் அருணகிரிநாதரின்
‘திருவெழுகூற்றிருக்கை’ வண்ணத்தில் சலவைக் கல்லில் பொறித்துப்
பதிக்கப்பட்டுள்ளது.

     கோபுரம் கடந்து உட்சென்றால் வலப்பால் சக்தி விலாச சபா கல்யாண
மண்டபம் உள்ளது. இடப்பால் கால பைரவர் சந்நிதி. எதிரில் பிரமதீர்த்தம்.
வலப்பால் புரவி மண்டபம் - ஆனைதிறை கொண்ட விநாயகர் - நளேஸ்வரர்
- இடப்புறம் திரும்பி விக்னேஸ்வரர் வித்யாதரேஸ்வரர் - பிரம்மலிங்கம்
இவைகளைத் தரிசித்துவிட்டுத் திரும்பிப் படிகளேறும்போது பைரவரையும்
சனீஸ்வரரையும் தொழுது சென்றால் வலப்பால் ஏகாம்பரேஸ்வரர், பின்
புறத்தில் சப்தகன்னியர் ஐயப்பன், ரேணுகாம்பாள் சந்நிதிகள் - இடப்பால்
வெளிச்சுற்றில் மகிழ மரமுள்ளது. மலைப்பாதை வாயிலைத் தொழுதவாறே
வந்தால் அம்பாள் சந்நிதி.

     முன்மண்டபத்தில் சித்ரகுப்தர் காட்சி. அம்பாள் சந்நிதி. சம்பந்தர்
பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.
அம்பாள் மூலத் திருமேனி - சிறிய மூர்த்தம். நேர் எதிரில் காளஹஸ்தீசுவர
லிங்க தரிசனம்.

     வலம் முடித்து, துவார விநாயகரை - வெள்ளிக் கவசமிட்ட அழகிய
கோலத்தில் வணங்கி, பழனியாண்டவரைப் பார்த்து, கவசமிட்ட கொடிமரம்
பணிந்து, சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தால் விளக்குகளின் பிரகாசம்
கண்களைப் பறிக்கிறது.

     வலப்பால் உற்சவ மூர்த்த மண்டபம். உள்ளே வலமாக வரும் போது
சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள், நால்வர் (மூல உற்சவ
மூர்த்தங்கள்) அறுபத்துமூவர் மூல மூர்த்தங்கள், சப்த கன்னியர், கௌதமர்,
தூர்வாசர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், வேணுகோபால சுவாமி, கஜலட்சுமி,
ஆறுமுகர், பிட்சாடனர், அறுபத்துமூவர் உற்சவர்கள், நடராச சபை முதலிய
சந்நிதிகளை ஆனந்தமாகத் தரிசிக்கலாம்.