பக்கம் எண் :

228 திருமுறைத்தலங்கள்


     விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலானோர்
வழிபட்ட லிங்கங்களும், ஜ்வரஹரேசரும், காலசம்ஹாரர், பைரவரும்
தொழுதவாறே சென்றால் சுவாமி சந்நிதி. சந்நிதிக்கு இருபுறமும் அழகாக
விளக்கு வரிசைகள்.

     மூலவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன்
வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க அருமையாகக் காட்சி தருகிறார்.

     ‘அண்ணாமலைக்கு ஹரோஹர’ வாய்விட்டுச் சொல்லி கையாரக் கூப்பி
உள்ளம் கனியத் தொழுகின்றோம்.

     கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள
பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம் - தரிசிக்கத்
தக்கது.

     கார்த்திகை தீபம், ஆடிப்பூரம் உத்தராயண தக்ஷிணாயன புண்ணிய
காலங்கள், சித்திரை வசந்த விழா, கந்த சஷ்டி, பாவை விழா, பங்குனி
உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்புடையன. இவை தவிர மாதாந்திர
உற்சவங்கள் அனைத்தும் முறையாக நடைபெறுகின்றன. 25 ஏக்கர்
நிலப்பரப்பில் ஏழு பிராகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில்
(திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினையுடையது.
நாடொறும் ஆறுகால வழிபாடுகள்.

     கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, தலவிசேஷமாகிய
லிங்கோற்பவர் பிரபையுடன், பிரம்மா, துர்க்கை ஆகியோர்
காட்சியளிக்கின்றனர். தலபுராணம் - அருணாசல புராணம், சைவ எல்லப்ப
நாவலர் பாடியுள்ளார். அருணைக் கலம்பகமும் அவர் அருளியதே.
குருநமசிவாயர் பாடியுள்ளது ‘அண்ணாமலை வெண்பா’வாகும்.

     குருநமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர்,
ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில்
வாழ்ந்த அருளாளர்கள். இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வ
சிகாமணி தேசிகரின் வழியில்வந்த நாகலிங்க தேசிகர் என்பவர்
இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது இராமநாதபுர ராஜா
சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று, இராமநாதபுரம்
சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைத் தாம்
மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம்
என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார். அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்'