சோழ நாட்டு (வடகரை)த் தலம். ‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது. நடராசப் பெருமான் ஆலயத்தால் பிரசித்திபெற்ற இத்தலத்திற்கு தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் - சென்னை, கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், தஞ்சை முதலிய பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை - திருச்சி மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தில்லைமரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்ற யெர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை. ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.) வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும் ; சித் + அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானாகாசம் என்றும், பூலோக கயிலாயம், புண்டரீகபுரம் சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பல பெயர்களுண்டு. தில்லைவாழ் அந்தணர்கள் இருந்து பெருமானைப் பூசித்துக் காத்துவரும் அற்புதத்தலம். ஜைமினி. ‘வேத பாதஸ்தவம்’ அருளிச் செய்ததும் ; சேந்தனார் அருள் பெற்றதும் ; மாணிக்கவாசகர் திருவாசகமும் திருக்கோவையாரும் பாடி முத்தி பெற்றதும் ; வியாக்ரபாதர் பதஞ்சலி உபமன்யு வியாசர், சுகர் திருநீலகண்டர், திருநாளைப்போவார் கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி. தில்லைவாழ் அந்தணர்களாகிய தீக்ஷிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். இக்கோயிலுள் ‘திருமூலட்டானம்’ என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான இலிங்கத்தில் ஒடுங்குவதால் இம் மூர்த்திக்கு இப்பெயர் உண்டாயிற்று. எனவே தில்லைத்தலத்தில் வசிப்போர், வந்துகண்டு செல்வோர், அர்த்தசாம வழிபாட்டைக் காண வேண்டியது அவசியமாகும். |