இறைவன்- விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா ‘உந்தி’யாகவும், திருவண்ணாமலை ‘மணிபூரக’மாகவும், திருக்காளத்தி ‘கழுத்தாகவும்’, காசி ‘புருவமத்தி’யாகவும், சிதம்பரம் ‘இருதயஸ்தான’மாகவும் சொல்லப்படும். இக்கோயிலில் உள்ள பேரம்பலத்திற்கு ‘மேரு’ என்றும் பெயருண்டு. “பெருமதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம்மேரு வருமுறை வலங்கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் சென்றார்” என்பது சேக்கிழார் வாக்கு (தடு. புரா.) வடக்கிலொரு ‘மேரு’ இருப்பதால் இதைத் ‘தட்சிணமேரு’ என்று கூறுவர். ‘மேருவிடங்கன்’ என்பது ‘சேந்தனார்’ தொடர். பஞ்சபூதத் தலங்களுள் இஃது ஆகாயத்தலம். பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை. பதஞ்சலி வியாக்ரபாதர்களுக்குப் பெருமான் கனகசபையில் நடனக்காட்சியை அருளிய தலம். தரிசிக்க முத்தி தரும்பதி. மூவர் பாடல் பெற்ற தலம். இராசராசன் வேண்டுதலின் பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைகொண்டு திருமுறைப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தெய்விகத்தலம். பெரியபுராணமென்னும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருமானால் அரங்கேற்றம் செய்யப்பட்ட அருமையான தலம். வைணவத்திலும் ‘திருச்சித்திரகூடம்’ என்று புகழ்ந்தோதப்படும் திருப்பதி. நாற்புறமும் கோபுரங்கள். தெற்குக் கோபுரவாயிலே பிரதான வாயிலாகும். இறைவன் - நடராசர், அம்பலக்கூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், (கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.) இறைவி - சிவகாமி, சிவகாமசுந்தரி. தலமரம் - தில்லை, ஆல் (திருமூலட்டானப் பிராகாரத்தில் ‘ஆல்’ கருங்கல் வடிவில் செய்து வைக்கப்பட்டுள்ளது.) தீர்த்தம் - சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், (திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம் முதலியன. (சிவகங்கையே பிரதான தீர்த்தம். இளமையாக்கினார் கோயிலின் எதிரில் வியாக்ரபாததீர்த்தம் உள்ளது.) |