பக்கம் எண் :

234 திருமுறைத்தலங்கள்


     இக்கோயிலுள் 1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் 3. பேரம்பலம்
4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன.

     1.சிற்றம்பலம் : நடராசப் பெருமான் திருநடம்புரிந்தருளும் இடம்.
“தூய செம்பொன்னினால் எழுதிவேய்ந்த சிற்றம்பலம்” என்பார் அப்பர்.
இவ்வம்பலம் ‘தப்ரசபா’ எனப்படும். முதலாம் ஆதித்த சோழனின் மகன்
முதற்பராந்தகசோழன் இச்சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்தான் என்று
திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் ‘லெய்டன்’ நகரப் பெரிய செப்பேடுகளும்
கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று
கோயிற்புராணம் தெரிவிக்கின்றது. இச்சிற்றம்பலம் உள்ள இடம் உயர்ந்த
அமைப்புடையது. பக்கவாயில் வழியாக மேலே செல்ல வேண்டும்.
இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப் படிகள்
உள்ளன. இப்படிகளின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு
சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்த போது, இப்படிகளிலுள்ள
யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்
பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூலுக்குத் ‘திருக்களிற்றுப்
படியார்’ என்ற பெயர் ஏற்பட்டது. நடராசப்பெருமானின் வலப்பால்
‘ரஹஸ்யம்’ - அருள்ஞானப் பெருவெளி - உள்ளது.

     2.பொன்னம்பலம் (கனகசபை) : நடராசப்பெருமான் அபிஷேகம்
கொண்டருளும் இடம். சிற்றம்பலத்திற்கு முன்னால் உள்ள பகுதி. இங்கு
ஸ்படிகலிங்கத்திற்கு நாடொறும் ஆறுகால பூஜையும், இரண்டாங்காலத்தில்
ரத்னசபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு
நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான்
என்று தெய்வச் சேக்கிழார் ‘இடங்கழி’ நாயனார் வரலாற்றில் கூறுகின்றார்.
தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும்,
படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன்
இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது.

     3.பேரம்பலம் : இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான
காளிங்கராயன் விக்கிரமசோழன் காலத்தில் இச்சபையைச் செம்பினால்
வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறியலாம். பின்பு,
இப்பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கன் சோழன்
ஆவான். இங்குத்தான் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.
இம்மணவில்கூத்தன் செம்பொற்காளமும் செய்து தந்தான் ;