நூற்றுக்கால் மண்டபம் அமைத்தான் ; நந்தவனம் அமைத்தான் ; ஓராயிரம் கறவைப் பசுக்களைக் கோயிலுக்கு வழங்கினான் ; திருப்பதிகங்கள் ஓத மண்டபம் அமைத்தான் ; திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தான் என்னும் பல அரிய செய்திகளும் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன. 4. நிருத்த சபை : நடராசப் பெருமானின் கொடிமரத்துக்கு (துவஜஸ்தம்பத்திற்கு)த் தென்பால் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே. அப்பெருமானின் திருமேனி இங்கே உள்ளது. 5. இராச சபை : இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு முன்னர்ச் சொல்லிய பஞ்சாக்கரப் படியில் அபிஷேகமும் இம்மண்டபத்தில் முடிசூட்டு விழாவும் நடைபெற்று வந்தன. இம்முடிசூட்டினைத் தில்லைவாழ் அந்தணர்களே செய்து வந்தனர். இத்தலத்தில் நிகழ்ந்த அரிய செயல்களுள் சில : 1) மாணிக்கவாசகர் புத்தரை வாதில்வென்று ஊமைப் பெண்ணைப் பேசவித்தது. 2) திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது. 3) உமாபதிசிவம் ‘கொடிக்கவி’ பாடிக் கொடியேற வைத்தது. 4) திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச் செய்தது. 5) திருமுறைகளை வெளிப்படுத்தியது. 6) சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத் தந்தது முதலிய பலவாகும். தேவாரப் பதிகங்கள், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, கோயில் நான்மணி மாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமி இரட்டை மணிமாலை, தில்லைக் கலம்பகம், கோயிற் புராணம் முதலிய நூல்களாலும், ஏனைய அளவற்ற நூல்களில் ஆங்காங்கு வரும் பகுதிகளாலும் இத்தலத்தின் பெருமையை அறியலாம். திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியிட்டுள்ள ‘சிதம்பர விலாசம்’ நூல் இக்கோயிலமைப்பைப் பற்றிக் கூறுகின்றது. |