இக்கோயிலுக்கு, மிகச்சிறப்பான திருப்பணிகளைச் செய்த விக்கிரம சோழன் காலம் வரையில் வழங்கப்பட்ட நிவந்தங்கள் சண்டேஸ்வரர் பெயரால் நடைபெற்று வந்தன. அம்மன்னனின் காலத்திற்கு பிறகு குறிப்பிட்ட குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அக்குழுவில் தில்லை வாழ் அந்தணர்கள் சிலரும் வழிபாடு செய்யும் உரிமை கருதிச் சேர்க்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு இக்கோயில் தில்லைவாழ் அந்தணர்க்கு உரியதாயிற்று. இவ்வாறு, கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை கூறுகின்றது. (Annual Reports on South Indian Epigraphy) ‘மணவில்’ என்ற ஊரின் தலைவனும், முதற்குலோத்துங்க சோழன் விக்கிரமசோழன் ஆகியோரின் படைத்தலைவனுமாகிய பொன்னம்பலக் கூத்தன் என்பவன் தில்லையில் நூற்றுக்கால் மண்டபத்தைத் தன் மன்னன் பெயரால் விக்கிரம சோழன் மண்டபம் செய்வித்தான் ; தேவாரம் ஓதுவதற்கு மண்டபம் கட்டினான் ; தேவாரப் பதிகங்களைத் தன் அமைச்சனான காளிங்கராயனைக் கொண்டு செப்பேட்டில் எழுதுவித்தான் ; ஞானசம்பந்தப் பெருமான் கோயிலைப் பொன்னால் வேய்ந்தான் ; நடராசப் பெருமான் மாசிக்கடலாட்டின் போது எழுந்தருளியிருக்க, ‘கிள்ளை’ என்னும் ஊரில் மண்டபம் அமைத்தான். பேருந்துச் சாலையோரத்தில் அமைந்துள்ள கீழ்வாசல் கோபுரம் ஏழு நிலைகளுடன் விளங்குகிறது. வாயிலைக் கடந்து உட்சென்றால் உள்கோபுரமும் ஏழு நிலைகளுடன் காட்சியளிக்கிறது. வலப்பால் தில்லைமரம் வளரும் மேடையுள்ளது. நாற்புற வாயில்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. வாயிலைக் கடந்ததும் வலப்பால் ஆயிரக்கால் மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது சிவகங்கைத் தீர்த்தம். கரையில் தென், கீழ்புறச் சுவர்களில் திருவாசகப் பாடல்கள் முழுவதும் கல்வெட்டுக்களாகப் பதிக்கப் பட்டுள்ளன. குளத்தின் மேற்கரையில் ‘பாண்டி நாயகம்’ என்கிற முருகன் சந்நிதி உள்ளது. சிவகாம சுந்தரி சந்நிதி தனிக்கோயிலாகப் பொலிவுற உள்ளது. உள் பிராகாரத்தில் சபாநாயகர் (தருமை) கட்டளை அறை, நிருத்தசபையில் வலக்காலை மேலே தூக்கியுள்ள ஊர்த்துவ தாண்டவர், சரபமூர்த்தி முதலிய சந்நிதிகள் உள்ளன. வெளிப்பக்கத்தில் பிட்சாடனர் சுதை சிற்பம் உள்ளது. நடராச சந்நிதிக்கான தங்கத்தகடு வேய்ந்த கொடிமரம் உள்ளது. பிராகாரத்தில் அம்பாள் சந்நிதி, கம்பத்திளையனார், தாயுமானவர், விநாயகர், சுப்பிரமணியர், படிகளேறிச் சென்றால் திருமுறை காட்டிய |