பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 237


விநாயகர் (பொல்லாப் பிள்ளையார்) சுதை சிற்பம் முதலியனவுள்ளன.
தொடர்ந்து பிராகாரத்தில் விசுவநாதர் லிங்கம், வைத்தியநாதர் தையல்
நாயகி சந்நிதி, காலபைரவர், சண்டேசுவரர், விநாயகர், அறுபத்துமூவர்
திருமேனிகள் உள்ளன. திருமூலட்டானம் சுவாமி சந்நிதி. பக்கத்தில் ‘உமைய
பார்வதி’ தங்கக் கவசத்தில் பேரழகோடு காட்சி தருகின்றாள். அர்த்தசாம
அழகர் புறப்பாட்டுச் சபையுள்ளது. உற்சவமூர்த்திகள் வைத்துள்ள மண்டபம்,
சனிபகவான் சந்நிதி உள்ளது.

     சிற்றம்பலத்து நடமாடும் சிவக்கொழுந்தைத் தரிசிக்கும்போது மனம்
லயிப்புற்றால் ‘என்று வந்தாய்’ எனும் குறிப்பு நமக்கும் கிடைக்கும். அம்பலக்
கூத்தர் இருப்பது சிற்றம்பலம் - சிற்சபை. முன் மண்டபம் பேரம்பலம்.
நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் ‘சிதம்பர ரகசியம்’ உள்ளது. இந்த
ரகசியம் உள்ள இடத்தில் வில்வதளங்கள் தொங்குகின்றன.

     நடராசப் பெருமானை நின்று தரிசிக்கும்போது இடப்பால் கோவிந்தராசப்
பெருமாள் சந்நிதியுள்ளது. ‘திருச்சித்ரகூடம்’ எனப்படும் இச்சந்நிதியில்
பெருமாள் கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். உள்ளே வலமாக வரும்
போது வேணு கோபாலர் சந்நிதி யதிராசர், யோக நரசிம்மர், கூரத்தாழ்வார்,
ஆசார்யர்களின் உற்சவ மூர்த்தங்கள், ஆஞ்சநேயர் திருமேனிகள்
முதலியவை உள்ளன.

     தில்லையாடியின் திருவடி - ஆடஎடுத்திட்ட பாதம் - குஞ்சிதபாதம்
நம் குறைகளைப் போக்கி நிறைவையும் நல்வாழ்வையும் தருமே ! ஆனித்
திருமஞ்சனமும் மார்கழித் திருவாதிரையும் இத்திருக்கோயிலில் நடைபெறும்
மிகச்சிறப்பான விழாக்களாகும். மகுடாகமப்படி பூசைகள் நடைபெறுகின்றன.

     ‘செல்வநெடு மாடம் சென்று சேணோங்கிச்
     செல்வமதி தோயச் செல்வ முயர்கின்ற
     செல்வர் வாழ் தில்லைச் சிற்றம் பலமேய
     செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே.’
                                      (சம்பந்தர்)

     ‘பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
     எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
     முத்தனே முதல்வாதில்லை அம்பலத்தா டுகின்ற
     அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே
                                       (அப்பர்)