பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 239


56/2. திருவேட்களம்.

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     அண்ணாமலை நகரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை
நகர் செல்லும் சாலையில் சென்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக
வளாகத்துள் புகுந்து நேரே சென்றால் (பல்கலைக்கழகப் பகுதியைத் தாண்டி)
சாலை ஓரத்தில் கோயில் உள்ளது.

     அர்ச்சுனனுக்குப் பாசுபதம் தந்தருளிய தலம். ஞானசம்பந்தப் பெருமான்
இங்குத் தங்கியிருந்து நாடொறும் சென்று தில்லைச் சபாநாயகரைத் தரிசித்து
வந்தார். நாரதர் வழிபட்ட தலம்.

     இறைவன் - பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்.
     இறைவி - சற்குணாம்பாள், நல்லநாயகி.
     தலமரம் - மூங்கில்.
     தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில் உள்ளது.

     சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது.

     (தில்லைக்கூத்தனை வழிபட்டபின் ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்து
பெருமானை வணங்கினார். பின்னர் இங்கேயே சிலநாள்கள் தங்கியிருந்தார்.
அப்பர் பெருமான் தில்லையை வணங்கிப் பின்பு வந்து இத்திருக்கோயிலைப்
பணிந்து, திருக்கழிப்பாலையையும் தொழுது மீண்டும் தில்லை சென்றடைந்தார்.

     கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் எதிரில் நாகலிங்க மரமும்
குளமும் உள்ளன. நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இத்திருக்கோயில்
‘நகரத்தார்க்கு’ உரியது.

     கோபுரம் தொழுது வாயிலைக்கடந்து உட்சென்றால் பிராகாரத்தில்
சித்திவிநாயகர், சோமாஸ்கந்தர் சந்நிதிகள் உள்ளன. நால்வர்களை யடுத்துச்
சொக்கநாதரும் மீனாட்சியும் காட்சிதர, அடுத்துச் சுப்பிரமணியர், மகாலட்சுமி
சந்நிதிகள் உள்ளன. தலமரம் மூங்கில் உளது. பைரவர், நவக்கிரகங்கள்
சந்திரன் சூரியன் உள்ளனர்.

     வலம் முடித்து முன்மண்டபத்தில் சென்றால் வலப்பால் அம்பாள்
சந்நிதி. நின்ற கோலம். நேரே சுவாமி காட்சி தருகின்றார் - சிவலிங்கத்
திருமேனி - அர்ச்சுனனுக்கருளிய பாசுபதேஸ்வரர், அழகான தோற்றம்.