பக்கம் எண் :

240 திருமுறைத்தலங்கள்


     சந்நிதி வாயிலின் முன்னால் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள்
உள்ளன. மகாமண்டபத்தில் வலப்பால் நடராசர் சபை - சிவகாமி தரிசனம்.
நடராசர் மகுடமணிந்து காட்சி தருவது சிறப்புடையது. இடப்பால் நால்வர்
உற்சவத் திருமேனிகளும் தொடர்ந்து உற்சவ மூர்த்தங்களும் வைக்கப்
பட்டுள்ளன. இம்மூர்த்தங்களுள் பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அருச்சுனன்
திருமேனியும் தல வரலாற்றுத் தொடர்புடையவை. இவை இரண்டும் மிகப்
பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

     இத்திருக்கோயிலுக்குத் தொடர்புடைய வகையில் (1) முன் மண்டபத்
தூண்களில் இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் நாய்களுடன்
செல்வது (2) அருச்சுனனுடன் போரிடுவது போன்ற சிற்பங்கள் உள்ளன.
இன்னொரு தூணில் அர்ச்சுனன் தவம் செய்வது, கீழே (பன்னி) மூகாசூரன்
வந்து அதற்கு இடையூறுசெய்வது போன்ற சிற்பமும் உள்ளது. கோஷ்ட
மூர்த்திகளாக உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி,
இலிங்கோற்பவர், பிரம்மா ஆகியோர் உளர். சண்டேசுவரர் சந்நிதி உளது.

     கோயிலில் பெருவிழா, வைகாசி விசாகத்தில் ஏகதின உற்சவமாக
நடைபெறுகிறது. அன்று பசுபாதம் அருளிய காட்சியும், பஞ்ச மூர்த்திகள்
புறப்பாடும் இடம் பெறுகின்றன.

     நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள் முதலியவை
நடைபெறுகின்றன. நாடொறும் ஐந்து கால வழிபாடுகள், இக்கோயிலின்
பக்கத்திலேயே திருக்கழிப்பாலையும், நெல்வாயிலும் (சிவபுரி) உள்ளன.

    “அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணலார்
          ஆரழல் அங்கை அமர்ந்திலங்க
     மந்த முழவம் இயம்ப மலைமகள்
           காண நின்றாடிச்
     சந்தம் இலங்கு நகுதலை கங்கை
           தண்மதியம் மயலே ததும்ப
     வெந்த வெண்ணீறு மெய்பூசும்
           வேட்கள நன்னக ராரே”             (சம்பந்தர்)

     நன்று நாடொறு(ம்) நம்வினை போயறும்
     என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
     சென்றுநீர் திருவேட்களத்து உள்ளுறை
     துன்று பொற்சடையானைத் தொழுமினே.        (அப்பர்)