தலமரம் - முல்லை. தீர்த்தம் - சக்கர தீர்த்தம், கோயிலின் பக்கத்தில் உள்ளது. இந்திரனும், கார்க்கோடனும் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது. தருமையாதீனத் திருக்கோயில். கிழக்கு நோக்கிய சந்நிதி. ராஜகோபுரமில்லை. பக்கத்தில் குளம் உள்ளது - படிகள் செம்மையாக இல்லை. உள்நுழைந்தால் வெளிச்சுற்றில் உள்ள கிளுவைப் பத்திர மரத்தில் தலமரமான முல்லைக்கொடி சுற்றியவாறு படர்ந்துள்ளது. கற்பக விநாயகர், விஷ்ணு, ஷேத்ரலிங்கம், பாலசுப்பிரமணியர், இலக்குமி முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் - அழகான திருமேனி. அடுத்து நவக்கிரக சந்நிதி. வலம் முடித்துப் படிகளேறினால் முல்லை வனநாதர் சந்நிதி - நேரே மூலவர் தரிசனம். மூர்த்தி சுயம்புத் திருமேனி. பாணத்தில் இருவெட்டுத் தழும்புகள் உள்ளன. இத்தலத்திற்கு வடுகநாத தேசிகர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. நாடொறும் நான்கு காலவழிபாடுகள் நடைபெறும் இக் கோயிலின் பெருவிழா மாசி மகத்தன்று ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது. தைப்பூச நாளில் நூற்றெட்டு காவடிகள் எடுப்பது இங்கு விசேஷமானது. பக்கத்தில் குருகாவூர் தலம் உள்ளது. ‘நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன் அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனியரனூர் மஞ்சாரு மாட மனைதோறு மைய முளதென்றுவைகி வரினுஞ் செஞ்சாலி நெல்லின் வளர் சோறளிக்கொ டிருமுல்லை வாயிலிதுவே.’ (சம்பந்தர்) -கயேந்திரனைக் காயலுறாதன்று வந்து காத்தோன் புகழ்முல்லை வாயிலினோங்கு மணி விளக்கே. (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் & அஞ்சல் - சீர்காழி (வழி) சீர்காழி வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம் - 609 113. |