பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 253


கடந்து உள் சென்றால் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், வில்வநாதர்,
அகிலாண்டேசுவரி, மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள இடத்தில்
பைரவர், சனீஸ்வரன், விநாயகர், கைலாசநாதர், பராசரர், பத்திரகாளி முதலிய
சிலாரூபங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

     வலம்முடித்து உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம். சதுரபீடத்தில்
சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி. வெள்ளி
நாகாபரணம் சார்த்தித் தரிசிக்கத் தனி ஆனந்தம்.

     மூலவரைத் தரிசிக்கும் நமக்கு வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது.
பெருவிழா நடைபெறவில்லை. மாசிமகத்தன்று சுவாமி, தென் திருமுல்லை
வாயிலுக்கு எழுந்தருளித் தீர்த்தம் கொடுக்கும் உற்சவம் சிறப்பாக
நடைபெறுகிறது. அம்பாளுக்கு ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு
அபிஷேகமும் ; நவராத்திரியில் இலட்சார்ச்சனையும் விசேஷமானது.

     ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள்
அவர்களின் ஆசியுடன் 1996-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இது
குறித்த கல்வெட்டு கோயிலின் நுழைவு வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது.
நாடொறும் மூன்று கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

     இவ்வூரைச் சேர்ந்தவரும், தற்போது சென்னை, மயிலை 61. லஸ்
அவென்யுவில் வசித்துவரும் 88 வயதுடைய முதுபெரும் பண்பாளருமாகிய
திரு T.S. துரைசாமி ஐயர் அவர்கள் ; இக்கோயிலின் வளர்ச்சியில் பெரும்
ஈடுபாடு கொண்டு, 1954, 1965, 1978, 1996 என நான்கு மகா
கும்பாபிஷேகங்களைத் தம் சொந்தச் செலவில் ஜகத்குருவின் ஆசியுடன்
செய்துள்ளார். கோயிற் பணிகள் தொடர்ந்து நடைபெறத்தக்க வகையில்
அறக்கட்டளை ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளார். இவர் பணியை
மனதார வாழ்த்துகிறோம். இக்கோயிலின் நிழற்படத்தையும் இப்பெருமகனாரே
தந்துதவினார்.

    ‘மடல் வரையின் மதுவிம்மு சோலை வயல் சூழ்ந்தழகாருங்
     கடல் வரை ஓதம் கலந்துமுத்தம் சொரியும் கலிக்காமூர்
     உடல் வரை இன்னுயிர் வாழ்க்கை யாயவொருவன் கழலேத்த
     இடர் தொடரா வினையான சிந்தும் மிறைவன் னருளாமே.’
                                              (சம்பந்தர்)