பைரவர் நவக்கிரக சந்நிதி முதலிய சந்நிதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து ; படிகளேறி, வௌவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. இங்குத் தனியே வைக்கப்பட்டுள்ள வில்லேந்திய வேலவர் பஞ்சலோகத் திருமேனி மிகச்சிறப்புடையதும், தொழுது நிறைவு பெறத் தக்கதுமாகும். நான்கு கரங்களுடன் வில்லையேந்திக் கம்பீரமாக மேலவரும் உயர்ந்தமயிலும் திகழ்ந்து காண்போர் கண்களுக்குப் பெருவிருந்தாகின்றன. இவை நெடுங்காலம் முன்பு கடலில் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. சுவாமி சந்நிதி வாயிலில் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன. வாயிலில் மேற்புறம் இயற்பகை நாயனாருக்கு இறைவன் அருள் செய்த காட்சி சித்திரமாக எழுதப்பட்டுள்ளது. கண்டுதொழுது உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். சதுர ஆவுடையாரின் குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத்திருமேனி. உள் பிராகாரத்தில் வலம் வர வசதியுள்ளது. மூலவருக்கு வலப்பால் நடராச சபை உள்ளது. திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் திருமுறை விண்ணப்பத்திற்கான கட்டளை இக்கோயில் 1964-ல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கல்வெட்டொன்று பதிக்கப்பட்டுள்ளது. சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு, சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகைநாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைகாசியில் குமரகுருபரர் குருபூஜை, மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம் முதலிய சிறப்புக் கட்டளைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன. நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறும் இத்திருக் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தலம் பல்லவனீச்சுரம். கவிராஜநாயகம் பிள்ளை என்பவரால் பாடப்பட்டுள்ள தலபுராணம் அச்சிடப் படவில்லை என்று தெரிகிறது. ‘போய்க்காடே மணந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச் சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும் வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.’ (முதுமரம் - ஆலமரம் என்று மக்கள் வழக்கில் உள்ளது) - சம்பந்தர் |