64/10. திருப்பல்வனீச்சுரம் காவிரிப்பூம்பட்டினம் பூம்புகார் | சோழ நாட்டு (வடகரை)த் தலம். இன்று காவிரிப்பூம்பட்டினம் - பூம்புகார் என்று வழங்குகிறது. பல்லவமன்னன் வழிபாடு செய்த தலம். பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோரின் அவதாரப் பதி. சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குவது இத்தலத்தில்தான். சீர்காழி, சிதம்பரம், திருச்சாய்க்காடு, மயிலாடுதுறை முதலிய பல ஊர்களிலிருந்து பூம்புகாருக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள ‘கண்ணகி வளைவை’த் தாண்டியதும் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. இறைவன் - பல்லவனேஸ்வரர் இறைவி - சௌந்தர நாயகி தலமரம் - மல்லிகை, புன்னை. தற்போதில்லை. தீர்த்தம் - காவிரி. கோயிலுக்கு எதிரில் அகத்தியர் உண்டாக்கிய ஜான்னவி தீர்த்தம் - திருக்குளம் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கோபுர வாயிலைக் கடக்கும் போது இடப்பால் அதிகார நந்தி சந்நிதியுள்ளது. வாயிலைக்கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதி ஆகியவை உள்ளன. விநாயகரையடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் பெருமான் உருவம் பெரியதாகவுள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், ஒரே சந்நிதிக்குள் சனிபகவான் பைரவர், சந்திரன் ஆகிய திருமேனிகள் வைக்கப்பட்டும் உள்ளன. வெளிமண்டபத்தில் தலப்பதிகக் கல்வெட்டு உள்ளது. வலப்பால் அம்பாள் சந்நிதி, நேரே மூலவர் தரிசனம். பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் கூடிய கம்பீரமான காட்சியைத் தந்தவாறு பல்லவனேஸ்வரர் திகழ்கின்றார். உள்மண்டபத்தில் வலப்பால் தில்லையமைப்பில் அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது. |