5-4-1995-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாடொறும் நான்குகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. பெருவிழா நடைபெறவில்லை. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா பன்னிரு நாள்களுக்கு நகரத்தார்களால் சிறப்பாக நடத்தப்பெறுகின்றது. இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்களே உள்ளன. ஒன்று கருவறையின் மேற்குச் சுவரிலும் இன்னொன்று கோயில் முற்றத்திலும் காணப்படுகிறது. மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியனது 17-ஆம் ஆட்சியாண்டில் இராஜாதி ராஜ வளநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்துக் கோயிலுக்கு நிலம் வழங்கியதை முதற் கல்வெட்டு கூறுகிறது. சாலி வாகனசகம். கலி 4775 சகம் 1670 (கி.பி. 1757) ஜய வருடம் ராயரவுத்த மிண்டநாயனார் முதலியோர் திருச்சாய்க்காட்டுச்சீனம், காவிரிப்பூம்பட்டினம் மாகாணம் பல்லவனீச்சரக் கோயிலுக்குத் திருப்பணிக்கும் வழிபாட்டிற்கும் நிலம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது அடுத்த கல்வெட்டு. “எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் கண்ணாய் உலகம் காக்கநின்ற கண்ணுதல் நண்ணும் இடம் மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச் சுரமே.” (சம்பந்தர்) -வாய்க்கமையச் சொல்லவ னீச்சரங்கு தோயவும்பராம் பெருமைப் பல்லவனீச்சரத்தெம் பாவனமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பல்லவனேஸ்வரர் திருக்கோயில் (பல்லவனீச்சுரம்) - காவிரிப்பூம்பட்டினம் பூம்புகார் அஞ்சல், சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் - 609 105. |