பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 261


     இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டுமுக்குளநீர்)
நீராடி இறைவனை வழிபடின் நினைத்த செயல் கைகூடும் என்பது
ஞானசம்பந்தர் அமுதவாக்கு.

    ‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை
     வாயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
     வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
     தோய் வினையாவரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.”

     இதுதவிர பின்வரும் பழைய தாலாட்டுப் பாட்டும் இக்குளச் சிறப்பை
விளக்கும் :-

    “சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து
      முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ.”

     ஊர் சிறியது - கோயில் பெரியது.

     இறைவன் - சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.
     இறைவி - பிரமவித்யாநாயகி.
     தலமரம் - வடஆலமரம்.
     தீர்த்தம் - முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்).

              இம்மூன்று திருக்குளங்களும் வெளிப்பிராகாரத்தில் உள்ளன.
              முதலில் அக்கினி தீர்த்தம், பிறகு சூரிய தீர்த்தம் இறுதியாக
              சந்திர தீர்த்தம் என்ற வரிசையில் நீராடுவர்.

     மூவர் பாடல் பெற்ற தலம்.

     ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில்
பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள்
இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான
அக்கினி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள்
உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரிய
தீர்த்தமுள்ளது. கரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர்
மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி
தனிக்கோயிலாகவுள்ளது. முகப்பில் ‘புதன்’ சந்நிதியும் எதிரில் அடுத்த தான
‘சந்திர’ தீர்த்தமும் உள்ளது. இத்தலம் புதனுக்குரிய தலமாதலின் புதனை
வலம் வந்து வழிபட்ட பின்னரே இங்குத் தரிசனம் பூர்த்தியாகும். புதன்
சந்நிதிக்குப் பக்கத்தில் முன் இல்லாத வில்வ மரம் உள்ளது.