இதன் பக்கத்தில் பிரமபீடம் உள்ளது. வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். ஆதலின் அம்பாளுக்குப் பிரமவித்யாம்பிகை என்று பெயர்வந்தது. அம்பாள் சந்நிதிக்குள் வலப்பால் பள்ளியறை. நேரே அம்பாள் தரிசனம். உள்பிராகாரத்தில் பிள்ளை இடுக்கி அம்பாள் என்ற பெயரில் நின்ற திருமேனியொன்றும் சுக்கிரவார அம்மன் சந்நிதியும் உள்ளன. சந்திரதீர்த்தத்தின் கரையில் வடால (வட ஆல) மரமுள்ளது. மிகப் பெரிய மரமாகத் தழைத்து விளங்குகிறது. ஆங்காங்கே விழுதுகள் ஊன்றி அவை அவை தனித்தனி மரமாகக் கிளைத்து விசாலமாகத் தழைத்துள்ளது. மரத்தினடியில் விநாயகரும், அவருக்கெதிரில் ருத்ரபாதம் என்னும் பெயரில் இருதிருவடிகள் செதுக்கப்பட்டும் உள்ளன. சந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வெளிவலம் முடித்து, கொடிமரம் தொழுது உட்சென்றால் வலப்பால் உற்சவ மண்டபம் உள்ளது. பக்கத்தில் அலுவலகம். வாயில் முகப்பில் மேலே வண்ணச் சுதையில் திருக்கல்யாணக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வாயிலைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் தரிசனம். அறுபத்துமூவர் மூல உற்சவத் திருமேனிகள் இருவரிசைகளில் முன் பின்னாக அழகுறக் காட்சி தருகின்றன. (மூலத் திருமேனிகள் பின் வரிசையாகவும் உற்சவத் திருமேனிகள் முன் வரிசையாகவும் இரு வரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.) அடுத்துப் பத்திரகாளி சந்நிதி உள்ளது. (அகோரமூர்த்தி உள்ள தலமாதலின் இங்குப் பத்திரகாளி சந்நிதி உள்ளது.) அதை அடுத்து வீரபத்திரர், இடும்பன், சுகாசனமூர்த்தி, நாகலிங்கம், விநாயகர், நால்வர், விஸ்வேஸ்வரர் முதலிய திருமேனிகள் ஒரு மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. கஜலட்சுமி தரிசனத்தையடுத்து இத்தலத்துக்குரிய சிறப்பு மூர்த்தியாகிய அகோரமூர்த்தி நின்ற மேனியராய், சூலத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து மிக்க அழகாக- உண்மையிலேயே அகோரராக - அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். கண்களுக்குப் பெருவிருந்தாகக் காட்சிதரும் அகோரமூர்த்தியை விட்டுப் பிரிந்து வரவே மனமில்லை. சலந்தரன்மகன் மருத்துவன். இவன் இறைவனை நோக்கித்தவம் செய்தான். இறைவன் காட்சிதந்து சூலத்தைத்தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்களைத் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். |