பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 263


அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார். போர் தொடுக்கையில்
மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை
ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதையறிந்த இறைவன்
தாமே அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து அவனை அழித்தார்
என்பது வரலாறு. அவ்வாறு அழித்தநாள் ஞாயிற்றுக்கிழமை பூரநட்சத்திரம்.
(மாசி மகத்து மறுநாள்) இதனால் இன்றும் இத்திருக்கோயிலில்
ஞாயிற்றுகிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் (இரண்டாங்கால முடிவில்)
அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு
வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில்
இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு
கட்டாயம் இவ்வழிபாட்டைத் தரிசிக்க வேண்டும். இவ்வரலாற்றையொட்டிச்
சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது
துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

     மூலஅகோர மூர்த்தியின் பக்கத்தில் உற்சவ அகோர மூர்த்தி காட்சி
தருகின்றார். அற்புதமான வேலைப்பாடு. காணக்காணத் தெவிட்டவில்லை.
திருவடியில் ஒருபுறம் மருத்துவன் இழிந்து தலைசாய்த்து விழும் அமைப்பும்
மறுபுறம் நந்தியும் உள்ளது காணத்தக்கது.

     இவ்அகோர மூர்த்திக்கு இக்கோயிற் பெருவிழாவில் ஐந்தாம் நாள்
அன்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்கிறது. இப்புறப்பாட்டின்
போது (மாசிப்பூர அபிஷேகத்தின் போது) இம்மூர்த்திக்குச் செய்யப்படும்
சிறப்புக்கள் பலப்பல. ஆயிரம் புட்டிகள் பன்னீர் அபிஷேகம், எண்ணற்ற
ரோஜா மாலைகள், புறப்பாட்டின் போது அடிக்கொரு பட்டு சார்த்தும்
சிறப்பு முதலியனவாக எண்ணற்ற சிறப்புக்கள்.

     நடராசசபை தில்லையைப்போலச் செப்பறையில் அமைந்துள்ளது.
உள்ளே உள்ள ஸ்படிகலிங்கத்திற்குத் தில்லையைப்போல் நாடொறும் பூசை
நடைபெறுகிறது. சிதம்பர ரஹஸ்யமும் உள்ளது. பைரவரை யடுத்து, காசி
துண்டீர விநாயகர், அஷ்டபுஜதுர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கை மேற்கு
நோக்கியிருப்பது இங்கு விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில்
பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது.

     வலம் முடித்துப்படிகளேறி முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர்
காட்சி தருகிறார். உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள்
பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.