பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 273


‘காழிப்பள்ளு’, ‘காழிஅந்தாதி’, இராமநாடகக் கீர்த்தனை’ முதலிய நூல்களைப்
பாடிய சீகாழி அருணாசலக்கவிராயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

     இத்திருக்கோயிலில் திருஞானசம்பந்தருக்கு நித்திய வழிபாடும் தை
அமாவாசை, வைகாசி மூலம், ஐப்பசி சதயம் ஆகிய நாள்களில் சிறப்பு
வழிபாடுகளும்; மலை மேல் உள்ள பெரிய நாயகருக்கு நாடொறும் நான்கு
கால பூஜைகளும் நடைபெறுகின்றன. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூரம்,
நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

     இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கன், வீரராசேந்திரன், இராசகேசரி
வர்மன், கிருஷ்ண தேவராயர் ஆகிய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள்
கிடைத்துள்ளன. இவற்றின் இறைவன் பெயர் 1. திருக்கழுமலம் உடையார்
2. திருத்தோணிபுரம் உடையார் எனவும்; ஞானசம்பந்தரின் பெயர்
ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிக்கப் பெறுகின்றது. தலத்தின் பெயரை
‘ராஜராஜவள நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம்’
என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

     இத்தலத்தில் உள்ள திருஞானசம்பந்தர் அவதாரம் செய்த இல்லம் ஸ்ரீ
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள்
அவர்களால் நினைவாலயமாகப் போற்றப்பட்டு வருகின்றது.

    ‘தோடுடைய செவியன் விடையேறி ஓர்தூவெண் மதிசூடிக்
     காடுடைய சுடலைப் பொடி பூசிஎன் உள்ளம்கவர் கள்வன்
     ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
     பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.’
   
    “வண்டார் குழலரிவை யொடு பிரியாவகை பாகம்
     பெண்தான் மிகவானான் பிறைச் சென்னிப் பெருமானூர்
     தண்டாமரைமல ராளுறை தவளந்நெடு மாடம்
     விண்தாங்குவ போலும்மிகு வேணுபுரம் அதுவே.”
                                             (சம்பந்தர்)

    ‘சிந்தித்து எழுமனமே நினையாமுன் கழுமலத்தைப்
    பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானைப் பசுபதியைச்
    சந்தித்த காலமறுத்து மென்றெண்ணி யிருந்தவர்க்கு
    முந்தித் தொழுகழல் நாடொறும் நந்தமையாள் வனவே."  (அப்பர்)

தலம் - 18