பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 279


     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     சீர்காழிக்கு அடுத்துள்ள தலம். சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும்
இடையில் உள்ள ஊர். கோயில் சாலையோரத்திலேயே உள்ளது.

     புள் (சடாயு). இருக்கு (வேதம்) வேள் (முருகன்) ஊர் (சூரியன்) என்ற
நால்வரும் வழிபட்டமையால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றது.
சடாயு வழிபட்டதால் சடாயுபுரி என்றும், வேதம் பூசித்ததால் வேதபுரி
என்றும், கந்தன் பூசித்ததால் கந்தபுரி என்றும், சூரியன் பூசித்தவூர் பரிதிபுரி
என்றும், அங்காரகன் வழிபட்ட தலம் அங்காரகபுரம் என்றும், அம்பிகை
வழிபட்டதால் அம்பிகாபுரம் என்றும், இறைவன் இத்தலத்து மந்திரமும்
மருந்தும் ஆகி உயிர்களின் வினைகளைப் போக்குவதால் வினைதீர்த்தான்
கோயில் என்றும் இதற்குப் பல பெயர்களுண்டு.

     ஊர் நடுவே கோயில். நாற்புறமும் உயர்ந்த சுற்று மதில்கள். கோயிலின்
கிழக்கில் வைரவரும், மேற்கில் வீரபத்திரரும், தெற்கில் கற்பக விநாயகரும்,
வடக்கில் காளியும் இருந்து இக்கோயிலைக்காவல் புரிகின்றனர். இதைப்
பின்வரும் தனிப்பாடல் உணர்த்தும் :-

    தெற்கிற்கணேசன் திகழ்மேற்கிற் பைரவரும்
     தொக்க வடக்கில் தொடர்காளி - மிக்ககிழக்
     குள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தோம்
     புள்ளிருக்கும் வேளூரிற் போய்.”


    சூரபத்மாவின் மார்பைப் பிளக்க முருகப்பெருமான் வேல் வாங்கிய
தலம். இங்கு அங்காரகனுக்குப் பெருமை அதிகம் - அங்காரக க்ஷேத்ரம்.
உயிர்களின் நோய்களைப் போக்கும் பொருட்டு உமாதேவி, தையல்
நாயகியாய் வடிவுகொண்டு தைல பாத்திரமும் சஞ்சீவியும் வில்வமரத்தடி
மண்ணும் கொண்டு தம்முடன் வர இறைவன் எழுந்தருளி மருத்துவராக
யிருந்து அருள்செய்த சிறப்புடைய தலம்.

     இறைவன் - வைத்தியநாதர்
     இறைவி - தையல்நாயகி
     தலமரம் - வேம்பு

     தீர்த்தம் - சித்தாமிர்த குளம். இங்குள்ள முருகப்பெருமான்-
செல்வமுத்துக்குமாரசுவாமி சந்நிதி மிகச் சிறப்பு வாய்ந்தது.

    சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

    சித்தாமிர்த தீர்த்தம் என்பது சித்தர்கணம் இறைவர் திருமுடியில்
அமிர்தத்தால் அபிஷேகித்தபோது அவ்வமிர்தம் வந்து இதில்