பக்கம் எண் :

280 திருமுறைத்தலங்கள்


கலந்தமையால் பெற்ற பெயர் ஆகும். இத்திருக்குளத்தில் தவளை
இருப்பதில்லை.

     கிழக்கு கோபுர வாயிலின் முன்புறம் இரும்புப் பந்தல்
போடப்பட்டுள்ளது. பேருந்திலிருந்து இறங்குவோர் இவ்வழியே கோயிலுள்
புகுவர். வாயிலைக் கடந்ததும் வலப்பால் அலுவலகம், இடப்பால் வேம்பு
தலமரம் உள்ளது. இதனடியில் ஆதிவைத்தியநாதர் தரிசனம் தருகிறார்.
எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி
சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. காமதேனு இறைவன்
மீது பொழிந்து அபிஷேகித்த பால் வழிந்தோடி வந்து கலந்தமையால் இதற்கு
கோக்ஷீர தீர்த்தம் என்பது மற்றொரு பெயர்.

    இவ்வாலயத்துள் தரப்படும் சந்தனக்குழம்புருண்டை (மருந்துப்
பொட்டலம் என்று சொல்வார்கள்) உட்கொண்டு, சித்தாமிர்த குளத்து நீரைப்
பருகி வந்தால் வியாதிகள் நீங்கும் என்பது இன்றும் கண்கூடு.

    விநாயகரையடுத்து, கிருத்திகை அபிஷேக மண்டபம் உள்ளது.
இங்குத்தான் கிருத்திகைதோறும் ஸ்ரீ செல்வமுத்துக்குமாரசுவாமிக்குச்
சிறப்பான அபிஷேகம் நடைபெறும். வாழ்வில் ஒவ்வொருவரும் காண
வேண்டிய அபிஷேகமாகும் இஃது. சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு
கொடிமரங்கள் உள்ளன. ஆடிப்பூர அம்மன் சந்நிதி தொழுது இடப்புறமாகத்
திரும்பி உள்வலமாக வரும்போது சுவர்களில் அஷ்டலட்சுமி வண்ண
ஓவியங்களைக் கண்டு மகிழலாம். மூலவர் வைத்தியநாதர், மிகப் பெரிய
துவாரபாலகர் திருவுருவங்கள். சடாயுவின் உருவமும் உள்ளது.

    சிறிய சிவலிங்கத் திருமேனி. மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக்
கண்ணாரத் தரிசிக்கின்றோம். பக்கத்தில்தான் இத்தலத்தில் உள்ள சிறப்பு
மூர்த்தமாகிய ஸ்ரீ செல்வமுத்துக் குமாரசாமியின் சந்நிதி உள்ளது.
குமரகுருபரர் முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் பாடி இப்பெருமானைப்
போற்றியுள்ளார். கஜலட்சுமி சந்நிதியையடுத்துத் திருமுறைப் பேழையுள்ளது.
நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும் காரைக்காலம்மையாரும்
உள்ளனர். ரிக் முதலிய நால்வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி
சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க
மூர்த்தங்களும் ; சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன.