இத்தலத்தில் (கோயிலில்) நவக்கிரகங்கள் ஒரே வரிசையாக உள்ளன. பைரவர் சந்நிதியையடுத்து இராமர், சடாயு, சுப்பிரமணியர், சூரியன், அங்காரகன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் வரிசையாக உள்ளன. தன்வந்திரி எழுந்தருளியுள்ளார். சுப்பிரமணியர், ஐயனார் சந்நிதிகளையடுத்து அறுபத்துமூவர் உற்சவமூர்த்தங்கள் வரிசையாக அழகாகவுள்ளன. முடிவில் சடாயுவின் உற்சவமூர்த்தமும் அங்காரகனின் உற்சவமூர்த்தமும் உள்ளன. அங்காரக தோஷ நிவர்த்தி வேண்டுவோர் இம்மூர்த்தத்திற்கு அருச்சனை செய்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆட்டு வாகனத்தில் அங்காரகன் புறப்பாடு பிராகார அளவில் நிகழ்கிறது. உற்சவ விநாயகர், வலஞ்சுழி விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகிய சந்நிதிகளைத் தரிசித்தவாறே தையல்நாயகித் தரிசனத்திற்குச் செல்லலாம். இறைவனுடன் தைலபாத்திரத்தை ஏந்தி அம்பிகை உடன் வந்தமையால் தைலாம்பாள் என்றும் அம்பாளை வழங்குகின்றனர். நிற்கும் திருக்கோலம் - ஆம் ! வழிபடுவோர் உள்ளத்தில் மறையாமல் நிற்கும் திருக்கோலமாகவே உள்ளது.
தலப்பதிகங்கள் சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பத்திரகாளி சந்நிதி தரிசிக்கத் தக்கது. மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டது. ஆதீனத்தின் கட்டளைத்தம்பிரான் ஒருவர் இங்கிருந்து மேற்பார்வை செய்து வருகின்றார். இஃது வேளூர் தேவஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. வடுகநாத தேசிகர் என்பவர் வேளூர்த் தலபுராணம் பாடியுள்ளார். அருணகிரிநாதரின் திருப் புகழ்ப் பாடலும் உள்ளது. தருமையாதீனத்தின் 10ஆவது குருமூர்த்தியாகிய சிவஞான தேசிகர் பாடியுள்ள செல்வமுத்துக்குமாரசுவாமி திருவருட்பா, குமரகுருபரர் பாடியுள்ள முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ், படிக்காசுத் தம்பிரான் பாடியுள்ள வேளூர்க்கலம்பகம், சிதம்பர முனிவர் அருளிய க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ், காளமேகப் புலவரின் தனிப்பாடல்கள் முதலியவைகளிலிருந்து இத்திருக்கோயிலின் - மூர்த்திகளின் பெருமைகளை யறிந்தின்புற்றுத் தொழுதுய்யலாம். இக்கோயில் விளக்கு அழகுக்குப் பெயர் பெற்றது. ‘வினைதீர்த்தான் கோயில் விளக்கழகு’ என்பது பழமொழி. நாடொறும் காமிகஆகம விதிப்படி ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. பங்குனிப் பெருவிழா சிறப்புடையது. செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு தை மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் வரும் கிருத்திகை நாள்கள், கந்தசஷ்டி போன்ற விசேஷ காலங்களில்தான் |