சோழநாட்டு (வடகரை)த் தலம்.
மக்கள் வழக்கில் குறுமாணக்குடி என்று வழங்குகிறது. வைத்தீஸ்வரன் கோயில் - மயிலாடுதுறை பேருந்துப் பாதையில் ‘பாகசாலை’ என்னும் கைகாட்டி உள்ள இடத்தில், அதுகாட்டும் வழியில் (இடப்பக்கமாக) 3 கி.மீ. சென்றால் ‘கண்ணாயிரமுடையார் கோயில்’ என்னும் திருக்கண்ணார் கோயிலை அடையலாம். நெடுஞ்சாலையில் கைகாட்டியின்கீழ் கோயிலின் பெயர்ப் பலகையும் (சிமெண்டில்) வைக்கப்பட்டுள்ளது. கோயில்வரை கார், வேன், பேருந்து செல்லும். பெரிய கோயில். சுற்று மதில், கோயில் நன்கு ஊள்ளது. வருமானமின்றித் தவிக்குங் கோயில்களுள் இதுவும் ஒன்றாகிறது.
இறைவன் - கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர். இறைவி - முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை தலமரம் - சரக்கொன்றை தீர்த்தம் - இந்திர தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது.)
சம்பந்தர் பாடல் பெற்றது.
ராஜகோபுரமில்லை. கட்டைக்கோபுர வாயிலின் முகப்பின்மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
உள்நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் அழகாகவுள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. வாயிலின் ஒரு புறம் குடவரை விநாயகரும் மறுபுறம் தண்டபாணியும் தரிசனம் தருகின்றனர்.
செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள்மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்திவிநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து, கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது. அதனால் எதிரில் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. கொடிமரத்தை வலம் வந்து மேலே சென்றால் மண்டபத்தின் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் நின்ற திருக்கோலம். பெயருக்கேற்ற அழகு |