பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 295


அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். அதுவே கணபதிதீர்த்தம் என்றும்
பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் ‘குளம் வெட்டிய விநாயகர்’
என்றழைக்கப்படுகிறார்.

     ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் திருப்பணிகள் செய்யப்பட்டு ஐந்து
நிலைகளுடன் காட்சியளிக்கிறது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய
விநாயகர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் தலமரமும் பிரமலிங்கமும்
உள்ளன. உள்சுற்றில் இடப்பால் நந்தனார் திருவுருவம் உள்ளது. வலப்பால்
வசந்தமண்டபம். உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையில்
பஞ்சமூர்த்திகள் அமைக்கப்பட்டு உள்ளன.

     கவசமிட்ட கொடிமரம். பெரிய நந்தி (நாளைப்போவாருக்காக) சற்று
விலகியுள்ளது. துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால்
உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த
சந்நிதி. சுந்தரவிநாயகர் சந்நிதி முதலியவை உள்ளன. அடுத்துள்ள
சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு -
தரிசிக்கத்தக்கது. அடுத்து சூரியன் அக்கினி வழிபட்ட லிங்கங்கள். ஆறுமுகர்
சந்நிதி ; தத்புருஷ், அகோர, வாமதேவ, சத்யோஜாத முகங்களின் பெயரில்
அமைந்துள்ள லிங்கபாணங்கள், கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன.
தலப்பதிகங்கள் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இடப்பால் அம்பாள்
சந்நிதி தனியாக, வலம்வரும் அமைப்புடன் உள்ளது. நவக்கிரகம், பைரவர்,
சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச் சென்றால் நேரே சுவாமி
சந்நிதி - மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். எதிரில்
உள்ள நந்தி, நீர்கட்டும் தொட்டிக்குள் உள்ளது.

      நடராச சபை உள்ளது. இங்குள்ள நடராச வடிவம் கலையழகு
வாய்ந்தது. இப்பெருமான் பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு
கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து இசை எழுப்புகின்றதைத்
தரிசிக்கலாம். கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், பிட்சாடனர், அகத்தியர்,
தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர்,
பைரவர் உள்ளனர்.

     சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள இரு துவாரபாலகர்களுள் தென்புறமுள்ள
வடிவம் சற்றுத் தலையைச் சாய்த்து நந்தியை விலகியிருக்குமாறு
கட்டளையிடுவதுபோலக் காட்சிதருவது கண்டு மகிழத்தக்கது. மூலவர் சுயம்பு
மூர்த்தி-மண்புற்று. இதன்மீது சார்த்தப்பட்டிருக்கும் குவளைக்குத்தான்
நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதி