இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு ஆகியோர் வழிபட்ட தலம். முனையடுவார் நாயனார் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். இந்நாயனாரின் திருமேனி கோயிலில் உள்ளது.
இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த லிங்கம் - இதுவே இறுதி வெள்ளையாக மாறியது. பின்னால் நண்டு பூசித்ததும் அதன் காற்சுவடு இலிங்கத்தில் பதிந்தது. வழிபட்ட இந்திரனுக்கு அம்பாள் அருள் புரிந்ததாகத் தலவராறு சொல்லப்படுகிறது.
இறைவன் - அருள் சோமநாதேஸ்வரர் இறைவி - ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, வேயுறுதோளியம்மை. தலமரம் - மகிழமரம்
அப்பர், சுந்தரர் பாடல் பெற்றது.
முகப்பு வாயில் - மேலே ரிஷபாரூடர் வண்ணச் சுதையில் உள்ளார். வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழம் உள்ளது. நேரே அம்பாள் சந்நிதி. துவார விநாயகராகச் சிவலோக கணபதி உள்ளார். அவரை வணங்கி வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் சந்நிதி. சோமநாதரின் சுந்தரத் தரிசனம் மனத்திற்குச் சாந்தியைத் தருகின்றது.
பிராகாரத்தில் இடப்பால் மூவர் கணபதிகள் - சிந்தாமணி கணபதி, செல்வ கணபதி, சிவாநந்த கணபதி ஆகிய மூவர் காட்சி தருகின்றனர். சப்தமாதாக்களும், சின்மயானந்த கணபதியும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்து உள்ளனர். அடுத்து மூன்று இலிங்கத் திருமேனிகள் - சிவலோகநாதர், கயிலாசநாதர், காசிவிசுவநாதர் பெயர்களைத் தாங்கியுள்ளன. மகாலட்சுமி சந்நிதி உளது. நடராச சபை தரிசிக்கத்தக்கது. காலபைரவர் சந்நிதி, மூனையடுவார் நாயனார் கைகூப்பியவண்ணம் உள்ளார்.
உள்வாயிலைக் கடந்து துவார விநாயகரைத் தொழுது கிழக்கு நோக்கிய மூலவரைத் தரிசிக்கின்றோம். வெண்ணிறத் திருமேனி, கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. பெருவிழா நடைபெறவில்லை. இத்திருக்கோயிலுக்குரிய உற்சவத் திருமேனிகள் பாதுகாப்புக் கருதித் திருவிழந்தூர் பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. செயல் அலுவலர் இவ்விரண்டிற்கும் ஒருவரே. நாடொறும் இருவேளை மட்டும் வழிபாடுகள். தலபுராணம் உள்ளது. |